இரும்புத்திரை படத்தை தொடர்ந்து, விஷாலுக்கு இந்த ஆண்டு இன்னொரு வெற்றிபடமாக சண்டக்கோழி 2 அமைந்துள்ளது.
லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் மற்றும் ராஜ்கிரண் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள சண்டக்கோழி திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் திருவிழாவாக மாறியுள்ளது.
ஆயுதபூஜை, விஜயதசமி எனும் பண்டிகை காலத்திற்கு ஏற்ற குடும்ப படமாக சண்டக்கோழி 2 அமைந்துள்ளதும், தனுஷின் வடசென்னை ஏ சான்றிதழ் படமாக வெளியானதும், விஷாலின் சண்டக்கோழி 2 படத்தை குடும்பம் குடும்பமாக இந்த 4 நாட்கள் பண்டிகை விடுமுறையில் கலெக்ஷன் அள்ளவும் சிரித்து மகிழவும் எண்டர்டெயின்மெண்ட் படமாக சண்டக்கோழி 2 சண்டையில்லாமல் சாம்ராஜ்யம் செய்கிறது.
சண்டக்கோழி vs சண்டக்கோழி2:
சண்டக்கோழி முதல் பாகம் அளவிற்கு இரண்டாம் பாகம் இல்லை என்று தான் சொல்லவேண்டும். மேலும், முதல் பாகத்திற்கும் இந்த பாகத்திற்கும் துளியும் சம்மந்தம் இல்லை. இது முழுக்க வேறு ஒரு கதை. திருவிழாவில் நடைபெறும் விருந்தில், வரலட்சுமியின் கணவர் ஒருவரை கொன்று விடுகிறார். சற்று நேரத்திலேயே இதன் காரணமாக வெடிக்கும் சண்டையில், வரலட்சுமி கணவரையும் ஊர்காரர்கள் சிலர் கொன்று விடுகின்றனர்.
இதற்கு பழிவாங்கும் வரலட்சுமி, தனது கணவரை கொன்றவர்களை கொல்கிறார். அதில், ஒருவர் மட்டும் தப்பிக்கிறார். அடுத்த திருவிழாவில் அவரை போட்டுத் தள்ள வரலட்சுமி எடுக்கும் முயற்சியை விஷால் எப்படி முறியடிக்கிறார் என்பதே திரைக்கதை.
வில்லியாக வரலட்சுமி விஸ்வரூபம் எடுத்துள்ளார். ஆனால், திமிரு படத்தின் வில்லி ஸ்ரேயா பல நேரங்களில் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
ராஜ்கிரணுக்கும், விஷாலுக்கும் வயசே ஆகாதா? என்பதே படத்தை பார்க்கும் அனைவரது முதல் கேள்வியாக எழுகிறது. யுவனின் இசையும் படத்திற்கு அப்படியே அமைந்துள்ளது.
முதல் பாகத்தில் குறும்பு ஹீரோயினாக வந்த மீரா ஜாஸ்மீனை ஓவர்டேக் செய்யும் அளவுக்கு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பட்டையை கிளப்புகிறார். இவரது சேட்டைத்தனம் படத்தில் இல்லை என்றால், ரசிகர்கள் தியேட்டர் பக்கமே போக மாட்டார்கள். கையை விட்டு ஸ்கூட்டர் ஓட்டும் விதம், பாடல்களில் வசீகரம், குறும்புப் பேச்சு எல்லாமே ஸ்கோர் செய்கிறது. ஆனால், சில இடங்களில் ஓவர் ஆக்டிங்கும் வந்து ஒட்டிக் கொள்வது போல தோன்றுகிறது. ஒருவேளை தொடரி படத்தின் கனெக்ஷன் இருப்பதாலோ என்னவோ?
சண்டக்கோழி படத்தை ஒப்பிட்டு பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த படம் ஓகே ரகம் தான். ஆனால், புதிதாக பார்க்கும் ரசிகர்களுக்கு, இயக்குநர் லிங்குசாமி, மீண்டும் ஒரு பக்கா கமர்ஷியல் படத்தை கொடுத்து ஐ அம் பேக் என்றே சொல்லியிருக்கிறார்.
கம்பத்து பொண்ணே பாடல், அனைவரையும் முணுமுணுக்க வைக்கிறது. செக்கரட்டான் பாறையிலே பாடல் ஆடவைக்கிறது. மற்றபடி பாடல்கள் பெரிதும் ஈர்க்கவில்லையே யுவன்.
திருவிழா செட் நம்மையும் திருவிழாவுக்கள் அழைத்தும் செல்லும் ஒளிப்பதிவு என படத்தில் பல பிளஸ்கள், படத்தில் உள்ள லாஜிக் மீறல்களை சரிகட்டுகிறது.
மொத்தத்தில், இந்த பண்டிகை காலத்தை குடும்பத்துடன் சென்று கொண்டாட சண்டக்கோழி 2 படம் ஒரு சிறந்த தேர்வு என்றே சொல்லலாம்.
சண்டக்கோழி 2 ரேட்டிங்: 2.75/5.