படிப்பு மட்டுமே வாழ்க்கை என்று நினைத்தால் பைத்தியம் தான் பிடிக்கும் என்பதை அறிவுறுத்தும் பாடமாக உருவாக்கப்பட்டுள்ள ஜீனியஸ் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
சுசீந்திரன் இயக்கத்தில், அறிமுக நாயகன் ரோஷன் தயாரித்து நடிக்கும் படம் ஜீனியஸ். வரும் அக்டோபர் 26ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் ரிலீசாகிறது. இந்நிலையில், படத்தின் டிரெய்லரை தற்போது படக்குழுவினர் யூடியூபில் வெளியிட்டுள்ளனர்.
ஆடுகளம் நரேன் தனது பையனை படிக்கவைத்து ஜீனியஸாக மாற்ற அவனை டியூசன் மேல் டியூசன் அனுப்புகிறார். படிப்பு படிப்பு என்று மட்டுமே வளரும் நாயகன், ஒருகட்டத்தில் அதனால் மன பிறழ்வு அடைகிறான். இதில் இருந்து நாயகன் எப்படி மீள்கிறான் என திரைக்கதையை இயக்குநர் சுசீந்திரன் உருவாக்கியுள்ளார்.
அறிமுக நாயகன் என்ற அச்சம் ஏதுமின்றி போட்ட பணத்தை எடுக்கும் தயாரிப்பாளராக ஃபிரேமுக்கு ஃபிரேம் தனது நடிப்பால் அசத்தியிருக்கிறார் ரோஷன்.
படிப்பை தாண்டி குழந்தைகளுக்கு விளையாட்டை கொடுக்க வேண்டும். ஓடி ஆடி விளையாண்டால் தான் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வார்கள். புத்திமானாக இருப்பதை விட சக்திமானாக இருக்க வேண்டும் என்பதையே இந்த ஜீனியஸ் டிரெய்லர் தெரிவிக்கின்றது.