இயக்குநர் டேவிட் கார்டன் க்ரீன் இயக்கத்தில் இந்த மாதம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியான ஹாலோவின் திரைப்படம் கடந்த இரு வாரங்களாக பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் பிடித்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
இதற்கு முன்னர் வெளிவந்த ஹாலோவின் படங்களிலேயே இரண்டாவது அதிக வசூல் செய்த படமாக ஹாலோவின் 2018 கணிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இப்படம் 172.3 மில்லியன் டாலர்கள் வசூலை ஈட்டியுள்ளதாக படக் குழு அறிவித்துள்ளது.
40 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தில் ஜேமி லீ கர்டிஸ் இணைந்துள்ளார். ஹாலோவின்: எச்.20(1998) மற்றும் ஹாலோவின் 2 என 11 ஹாலோவின் படங்கள் இதுவரை வந்துள்ளது. 1978ஆம் ஆண்டு வெளிவந்த ஹாலோவின் படம் தான் 183.6 மில்லியன் டாலர்கள் வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது.
இந்த வரிசையில், இரண்டாவது அதிக வசூல் பெற்ற படமாக ஹாலோவின் 2018 மாறியுள்ளது. மேலும், வரும் நாட்களில் வசூலை இப்படம் குவிக்கும் என்றால், இந்த சீரிஸில் அதிக வசூல் பெற்ற முதல்படமாகவும் இது மாறும் வாய்ப்புள்ளது.
அக்டோபர் மாதம் அமெரிக்காவில் ஹாலோவின் மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஹாலிவுட் நடிகர்கள் முதல் பொதுமக்கள் வரை பலதரப்பட்ட ஹாலோவின் விழாக்களில் பேய்கள் உடையணிந்து விசித்திரமாகவும் வித்தியாசமாகவும் காட்சி தருகின்றனர். இந்நிலையில், ரிலீசாகியுள்ள ஹாலோவின் படத்திற்கு ஹாலிவுட் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.