காங்டாக்: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை விளம்பரத் தூதராக அறிவித்து சிக்கிம் அரசு கவுரவப்படுத்தி உள்ளது.
சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் நேற்று குளிர்காலத் திருவிழா நடைபெற்றது. இதில், ஏ.ஆர்.ரகுமான் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். அப்போது, நிகழ்ச்சியில் பேசிய அம்மாநில முதல்வர் பவன்குமார் சாம்லிங், ரஹ்மானை சிக்கிம் மாநிலத்தின் விளம்பரத் தூதராக பணியாற்றுமாறு அன்புடன் அழைப்பு விடுத்தார். இதனை, ஏ.ஆர்.ரகுமானும் ஏற்றுக்கொண்டார். இந்த பொருப்பு மூலம், அம்மாநிலத்தின் அமைச்சருக்குரிய அந்தஸ்தும் அனைத்து கவுரவங்களும் கிடைக்கும்.
இதுகுறித்து ஏ.ஆர்.ரகுமான் கூறுகையில், “சிக்கிம் மாநிலம் சிகப்புத்தன்மை ஒற்றுமை, அமைதி, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றிற்கு உதாரணமாக திகழ்கிறது. எனக்கு முக்கியத்துவம் தந்து என்னை கவுரவிக்கும் விதமாக அளித்த தூதர் பணியை நான் பெருமையுடன் ஏற்றுக் கொள்கிறேன். அதை சிறப்புடன் செய்வேன்” என்றார்.
இசைப்புயலை பெருமையுடன் கவுரவிக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசிடம் உள்ள நிலையில் சிக்கிம் அரசு கவுரவித்திருக்கிறது. இருப்பினும் சிக்கிம் அரசின் இந்த செயல் தமிழகத்தையும் பெருமைப்பட வைத்துள்ளது.