இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், சகவீரரும் நீண்ட நாள் காதலருமான பருப்பள்ளி கஷ்யாபை திருமணம் செய்து கொண்டார்.
இந்த ஆண்டு பிரபலங்களின் திருமண ஆண்டாக அமைந்துள்ளது. விராத் கோலி, அனுஷ்கா சர்மா திருமணம்; தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் திருமணம்; பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் திருமணம், அம்பானி மகள் திருமணம் என வரிசைக் கட்டி பிரபலங்களின் திருமணங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், திடீரென தற்போது தனக்கும் தனது காதலரும் சக பேட்மின்டன் வீரருமான கஷ்யாபுக்கும் திருமணம் ஆகிவிட்டது என்பதை சிம்பிளாக ட்விட்டர் பதிவில் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார் இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால்.
இருவருக்கும் திருமணம் இந்த மாதம் நடக்கப்போகிறது என்பதை சில ஊடகங்கள் முன்னதாகவே கணித்து, தகவல்கள் வெளியிட்டன. சில வடிவமைக்கப்பட்ட திருமண அழைப்பிதழ்களும், டிசம்பர் 16ம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக இணையத்தில் உலவின. இந்நிலையில், எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி சிம்பிளாக சாய்னா நேவால் திருமணம் செய்துள்ளார்.
விளையாட்டு வீரர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் புடை சூழ பிரம்மாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சியையாவது நடத்துவாரா என்பது இனிமேல் தான் தெரிய வரும்.