வாகனப் பதிவில் தான், எந்த ஏமாற்று வேலையையும் செய்யவில்லை என நடிகை அமலா பால் நீதிமன்றத்தில் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ், மலையாளம் படங்களில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை அமலா பால். சமீபத்தில் அவரின் மீது வாகன வரி ஏய்ப்பு மோசடி என வழக்கு தொடர்ப்பட்டது.
சொகுசு காரினை புதுச்சேரியில் வாகனப் பதிவு செய்ததாகவும், அதன் வாயிலாக பல லட்ச ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் போலிஸ் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க கேரள நீதிமன்ற சம்மன் பல முறை அனுப்பப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் தேதி நேரில் ஆஜராஜி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்ற சம்மன் ஆணை பிறப்பித்திருந்தது. அன்றைய தினம் ஆஜராகாததால், ஜனவரி 5ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டது.
ஆனால், அவர் ஆஜராகாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இதனையடுத்து, வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து செவ்வாய்கிழமை நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான அமலா பால் அவர் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். மேலும் தான், வாகனப் பதிவில் எந்த ஏமாற்று வேலையையும் செய்யவில்லை எனவும் கூறியதாக தெரிகிறது.