ஐபிஎல் இந்த சீசனில் இருந்து விலகியதுடன், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து இந்தியா திரும்பிவிட்டார் சென்னை அணியின் மூத்த வீரர் சுரேஷ் ரெய்னா. இவரின் விலகலுக்கு தோனியால் வந்த சண்டை தான் காரணம் என்றும், அதனால் அணி நிர்வாகத்துக்கும் ரெய்னாவுக்குமான கருத்து வேறுபாடுதான் காரணம் என்று கூறப்பட்டது. தற்போது இதனை உண்மையாகும் பொருட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஓனர் ஸ்ரீனிவாசனின் பேட்டி அமைந்துள்ளது.
ஸ்ரீனிவாசன் ரெய்னா குறித்து பிரபல ஆங்கில இதழான அவுட்லுக்கிற்கு அளித்த பேட்டியில், ``சில கிரிக்கெட் வீரர்கள் அந்த காலத்து நடிகர்கள் போல 'தான் ஒரு பெரிய நட்சத்திரம்' என அதிக பந்தா காட்டுகின்றனர். சென்னை அணி ஒரு குடும்பம் போல என்றுமே ஒன்றாகவே இருந்திருக்கிறது. மூத்த வீரர்கள், இளைய வீர்ர்கள் என அனைவருமே ஒரு அணியாக ஒன்றிணைந்து செயல்படுவது எப்படி எனக் கற்றுக்கொண்டுள்ளனர்.
என்னைப் பொறுத்தவரை யாருக்காவது தயக்கம் இருந்தாலோ, திருப்தி இல்லையென்றாலோ விலகிவிடுங்கள் என்றே கூறுவேன். நான் யாரையும் எதையும் செய்ய வலியுறுத்தியதில்லை. சில நேரங்களில் சிலருக்கு வெற்றி தலைக்கு ஏறிவிடுகிறது. அதை ஒன்றும் செய்ய முடியாது. கொரோனா குறித்தும், ரெய்னா வெளியேறியது குறித்தும் தோனியுடன் பேசினேன். இந்த விஷயங்களை தோனி எப்போதும் போல கூலாக கையாண்டு வருகிறார். மொத்த அணியும் அவர் கட்டுப்பாட்டில் இருக்கிறது. வீரர்களின் கொரோனா தொற்று குறித்து கவலைப்பட தேவையில்லை என கூறிவிட்டார் தோனி.
அனைத்து வீரர்களுடன் ஜூம் கால் ஒன்றில் தோனி பேசியிருக்கிறார்.அனைவரையும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவருமே இளம் வீரர்கள் என்பதால் விரைவில் குணமாகிவிடுவார்கள் என்றும் எனக்கு நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். ரெய்னா வெளியேறியது இளம் வீரர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும். இன்னும் ஐபிஎல் சீசன் தொடங்கவே இல்லை. அதற்குள் ரெய்னா விலகிவிட்டார். இதனால் பணம் உட்பட எதையெல்லாம் இழக்கப்போகிறோம் என்பது ரெய்னாவுக்கு விரைவாகவே புரியும்" என்று அதிரடியாக பேசியுள்ளார்.
ஸ்ரீனிவாசனின் இந்தப் பேட்டி ரெய்னாவுக்கும் அணி நிர்வாகத்துக்கும் இடையேயான விரிசலை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. இதனால் ரெய்னா அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை அணியில் தொடர்வது கடினம் என்கிறார்கள் கிரிக்கெட் ஆலோசகர்கள்.