நியூசிலாந்து சென்றுள்ள 6 பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா நிபந்தனைகளை பாக்.வீரர்கள் தொடர்ந்து மீறி வருவதால் இனியும் விதிமீறல் நடந்தால் வீரர்கள் அனைவரையும் திருப்பி அனுப்பி விடுவோம் என்று நியூசிலாந்து சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. 34 வீரர்கள் உள்பட மொத்தம் 54 பேர் நியூசிலாந்துக்கு சென்றுள்ளனர். முதல் டி 20 போட்டி டிசம்பர் 18ம் தேதி தொடங்குகிறது. நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் அனைவரும் தற்போது 14 நாட்கள் சுய தனிமையில் உள்ளனர். நியூசிலாந்து சென்றவுடன் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் 6 வீரர்களுக்கு நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து மற்ற வீரர்கள் அனைவரும் சுய தனிமையில் இருக்க வேண்டும் என்றும், எந்தக் காரணம் கொண்டும் வெளியே செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டனர். ஆனால் அதை மீறி சில வீரர்கள் வெளியே நடமாடியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நியூசிலாந்து சுகாதாரத் துறை பாக். அணிக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் எச்சரிக்கையை மீறி பாக். வீரர்கள் மீண்டும் வெளியே நடமாடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நியூசிலாந்து நாட்டு சுகாதாரத் துறை பாக்.அணிக்கு கடைசி எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் இனியும் விதிமீறல் தொடர்ந்தால் வீரர்கள் அனைவரையும் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பி வைத்து விடுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து சுகாதாரத் துறையின் எச்சரிக்கை அறிவிப்பு குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாக அதிகாரி வாசிம் கான் அணி வீரர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பது: இதுவரை நம் வீரர்கள் 4 முறை கொரோனா நிபந்தனைகளை மீறியதாக நியூசிலாந்து சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இனியும் ஒரு முறை விதிகளை மீறினால் கூட அனைவரையும் நம்முடைய நாட்டுக்கே திருப்பி அனுப்பி வைத்து விடுவோம் என்று நியூசிலாந்து சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. நியூசிலாந்தில் கடுமையான கொரோனா நிபந்தனைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதை நாமும் பின்பற்ற வேண்டும். இந்த 14 நாட்களும் அனைவரும் கண்டிப்பாக சுய தனிமையில் இருந்தே ஆகவேண்டும். அதை முடித்த பின்னர் வெளியே செல்ல நமக்கு அனுமதி உண்டு. இவ்வாறு வாசிம் கான் தெரிவித்துள்ளார்.