முதல் டெஸ்டில் இந்தியாவுக்குக் கிடைத்த படுதோல்விக்குப் பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி நாளை மெல்பர்னில் தொடங்குகிறது. கோஹ்லி ஊருக்குத் திரும்பி விட்டதால் அவருக்குப் பதிலாக ரஹானே கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.கடந்த 17ம் தேதி அடிலெய்டு ஓவலில் தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை இந்திய ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறக்க வாய்ப்பில்லை. வெறும் மூன்றரை நாட்களில் முடிவடைந்த அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றி பெற்றது.
முதல் இன்னிங்சில் இந்தியா 244 ரன்களும், ஆஸ்திரேலியா 191 ரன்களும் எடுத்தது. முதல் இன்னிங்சில் 53 ரன்கள் முன்னிலை பெற்ற மகிழ்ச்சியில் போட்டியில் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற கனவுடன் தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, வரலாறு காணாத வகையில் 36 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதுதான் இதுவரை டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் மிகக்குறைந்த ரன்கள் ஆகும். பின்னர் 90 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆடத் தொடங்கிய ஆஸ்திரேலியா, 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 93 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இரண்டாவது இன்னிங்சில் இந்திய வீரர்களின் மோசமான ஆட்டம் இந்திய ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கவாஸ்கர், சேவாக், கம்பீர் உட்படப் பல முன்னாள் வீரர்களும் இந்திய வீரர்களின் மோசமான ஆட்டத்தைக் கடுமையாகக் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டி நாளை மெல்பர்னில் தொடங்குகிறது. மனைவியின் பிரசவத்திற்காக கேப்டன் கோஹ்லி ஊருக்குத் திரும்பிவிட்டார். இதனால் துணை கேப்டன் ரஹானே இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். முதல் போட்டியில் கிடைத்த மரண அடியை மறக்க முடியாமல் இந்திய வீரர்கள் தவித்து வருகின்ற போதிலும் இந்தப் போட்டியில் சிறப்பாக ஆட இந்திய வீரர்கள் முழு முயற்சி எடுப்பார்கள் எனக் கருதப்படுகிறது. இதனால் நேற்று அனைத்து வீரர்களும் மிகத் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக முகம்மது சிராஜ் சேர்க்கப்படுவார் என தெரிகிறது. அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் இதுதான் அவரது முதல் டெஸ்ட் போட்டி அரங்கேற்றமாக இருக்கும்.
மேலும் முதல் போட்டியில் படுதோல்வி அடைந்ததால் இந்த போட்டியில் பல மாற்றங்கள் இருக்கும் எனக் கருதப்படுகிறது. கோஹ்லிக்கு பதிலாக கே.எல். ராகுலும், பிரித்வி ஷாவுக்கு பதிலாக சுப்மான் கில்லும், விருத்திமான் சாஹாவுக்கு பதிலாக ரிஷப் பந்தும் சேர்க்கப்பட வாய்ப்புண்டு. உடல் திறனில் தேர்ச்சி பெற்றால் ரவீந்திர ஜடேஜாவும் அணியில் சேர்க்கப்படுவார். இதற்கிடையே மூன்றரை நாட்களில் முதல் டெஸ்ட் போட்டியை வென்ற மகிழ்ச்சியில் ஆஸ்திரேலிய வீரர்கள் உள்ளனர். இதனால் முதல் போட்டியில் விளையாடிய அதே வீரர்கள் தான் இந்தப் போட்டியிலும் விளையாடுவார்கள் என்று பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். காயம் முழுமையாகக் குணமடையாததால் டேவிட் வார்னர் இந்தப் போட்டியிலும் விளையாட வாய்ப்பில்லை. இதற்கிடையே 3-வது டெஸ்ட் போட்டி ஜனவரி 7ம் தேதி சிட்னியில் தொடங்குகிறது. ஆனால் சிட்னியில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் 3வது டெஸ்ட் போட்டியும் மெல்பர்னிலேயே நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.