கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறி ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டதால் தனிமைப்படுத்தப்பட்ட ரோகித் உள்பட 5 இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என தெரிய தெரியவந்துள்ளது. இதையடுத்து 7ம் தேதி சிட்னியில் தொடங்க உள்ள 3வது டெஸ்ட் போட்டியில் அவர்களுக்கு விளையாட எந்தத் தடையும் இல்லை. ஆஸ்திரேலியாவில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. தற்போது அங்கு உள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களும் இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று ஆஸ்திரேலிய நாட்டு சுகாதாரத் துறையும், அந்நாட்டு கிரிக்கெட் வாரியமும் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இதன்படி ஆஸ்திரேலியா சென்ற இந்திய வீரர்கள் 2 வாரங்கள் தனிமையில் இருந்த பின்னர் தான் விளையாட அனுமதிக்கப்பட்டனர்.
மைதானத்தையும், தங்கியிருக்கும் ஓட்டலை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று ஏற்கனவே வீரர்கள் அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். இந்நிலையில் புது வருடப் பிறப்பான 1ம் தேதி இந்திய கிரிக்கெட் வீரர்களான ரோகித் சர்மா, சுப்மான் கில், பிரித்வி ஷா, நவ்தீப் செய்னி மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் மெல்பர்னில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர். அப்போது அங்கு இருந்த நவல் தீப் சிங் என்ற இந்தியர் வீரர்கள் சாப்பிடுவதை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து தன்னுடைய சமூக இணையதள பக்கத்தில் வெளியிட்டார். மேலும் ரிஷப் பந்தை, தான் கட்டிப் பிடித்ததாகவும், வீரர்கள் சாப்பிட்டதற்கு 6,600 ரூபாய் பில்லை தான் தான் கட்டியதாகவும், அந்த பில்லின் புகைப்படத்துடன் தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய வீரர்கள் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறி ஓட்டலுக்கு சாப்பிட சென்றது தவறு என்று கூறி பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து ரோகித் சர்மா உள்பட 5 பேரையும் தனிமைக்கு செல்லுமாறு ஆஸ்திரேலிய சுகாதாரத் துறை உத்தரவிட்டது. இதையடுத்து 5 பேரும் தனிமைப்படுத்தப் பட்டனர். இந்நிலையில் இவர்கள் 5 பேர் உள்பட இந்திய வீரர்கள் அனைவருக்கும் இன்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் யாருக்கும் கொரோனா இல்லை என தெரியவந்துள்ளது. இதையடுத்து வரும் 7ஆம் தேதி சிட்னியில் தொடங்க உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இவர்கள் அனைவரும் விளையாடலாம். இதற்கிடையே ரிஷப் பந்தை தான் கட்டிப்பிடிக்கவில்லை என்றும், நண்பர்களிடம் பந்தா காண்பிப்பதற்காக அவ்வாறு தெரிவித்திருந்ததாக இந்திய ரசிகர் நவல்தீப் சிங் தெரிவித்துள்ளார்.