இங்கிலாந்து அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றபயணத்தில் முதல் தொடரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணியை தோற்கடித்து, ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி தொடரை 2-0 வென்று அசத்தி உள்ளது. இந்த தொடரின் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆட்ட நாயகன் விருதையும், தொடரின் தொடர் நாயகன் விருதையும் கேப்டன் ஜோ ரூட் வென்று அசத்தியுள்ளார். இந்த தொடரில் இவரின் அசாத்தியமான பேட்டிங் திறமையால் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் முறையே 228, 1, 186 மற்றும் 11 ரன்கள் என 426 ரன்களை விளாசி அசத்தினார்.
இது சம்பந்தமாக முன்னாள் இங்கிலாந்து வீரர் Geoffrey Boycott டெலிகிராப் தளத்தில், ஜோ ரூட் தனது உடற்தகுதியை இப்படியே தொடர்ந்தால், ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும் ஜோ ரூட்டின் தற்போதைய வயது 30, இதுவரை இவர் 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,249 ரன்களை எடுத்துள்ளார். இந்த ஃபார்ம் தொடர்ந்தால் டெஸ்ட் போட்டிகளில் சச்சினின் 15,921 ரன் சாதனையை ரூட் சுலபமாக முறியடிப்பார் என கூறியுள்ளார். இந்த தொடரில் ரூட் அடித்த 228 ரன், அவரின் டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்காவது முறையாகும். மேலும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் அடித்த இங்கிலாந்து வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
இந்த வரிசையில் முன்னாள் வீரர்களான Boycott (8,114), Kevin Pietersen (8,181) மற்றும் David Gower (8,231) ஆகியோரை பின்னுக்கு தள்ளியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று ஏழு ஆண்டுகள் ஆன போதும், அவரின் பல சாதனைகள் இன்னும் முறியடிக்கப்படாமல் உள்ளன. அந்த வகையில் டெஸ்ட் போட்டிகளில் அவரின் 15, 921 ரன்னை முறியடிக்கப்போகும் போட்டியில் களமிறங்கிய வீரர்களான வில்லியம்சன் (7115), வீராட் கோலி (7318), ஸ்டீவ் ஸ்மித் (7540) மற்றும் ஜோ ரூட் (8249) ரன்களை விளாசி மற்ற மூவரையும் தனக்கடுத்தே நிறுத்தியுள்ளார் ரூட். சச்சினின் சாதனையை முறியடிக்க வேண்டும் என்றால் ரூட் இன்னும் குறைந்தபட்சம் 100 டெஸ்ட் போட்டிகளிலாவது விளையாட வேண்டும் என தெரிவித்துள்ளார்.