ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் பஞ்சாப் விவசாயியின் 19 வயது மகன் இடம் பிடித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள நியூசிலாந்து- ஆஸ்திரேலியா இடையேயான போட்டியில், பஞ்சாப் மாநிலத்தை பூர்விகமாக கொண்ட ஜோகா சிங் சங்காவின் 19 வயது மகன் தன்வீர் சங்கா என்பவர் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ளார்.
24 வருடங்களுக்கு முன் தன்வீரின் பெற்றோர்கள் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு புலம் பெயர்ந்துள்ளனர். தன்வீரின் தந்தை ஜோகா சிங் முதலில் அங்கு விவசாய வேலைகளை செய்துள்ளார். தற்போது, வாடகை கார் ஓட்டி வருகிறார். அவரது அம்மா உப்நீத் கணக்கராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைத்தது குறித்து பேசிய தன்வீர் சங்கா, அணியில் நான் விளையாட தேர்வாகியுள்ளேன் என்ற செய்தியை அறிந்ததும் நான் நிலவை தொட்டு விட்டதாகவே உணர்ந்தேன். அதை நிஜம் என்று நம்ப சில நிமிடங்கள் எடுத்துக் கொண்டேன். 19 வயதில் விளையாட வாய்ப்பு கிடைப்பதெல்லாம் வரம் என்றும் தெரிவித்தார்.
இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள் உள்ளூர் அளவிலும், அண்டர் 19 அணிக்காகவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் விளையாடி இருந்தாலும் தேசிய அணியில் சர்வதேச போட்டியில் விளையாட இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் ஆஸ்திரேலிய அணியில் தேர்வாவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.