வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் பொல்லார்ட் கார் விபத்தில் உயிரிழந்ததாக பரவிய போலி வீடியோவை பார்த்து கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். 33 வயதே ஆன பொலார்ட் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 113 ஒருநாள், 76 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். மேலும் 531 டி20 ஆட்டங்களில் விளையாடி மகத்தான டி20 வீரராகவும் அறியப்படுகிறார்.
இதற்கிடையே, ஐபிஎல் தொடர் என்றாலே, மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள வீரர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஐபிஎல் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் பொல்லார்ட் நீண்ட நாளாக விளையாடி வருகிறார். இதன் மூலம், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் பொல்லார்ட் மரத்தில் அடித்த ஆணி போல் உள்ளார்.
இந்நிலையில், கார் விபத்தில் பொலார்ட் உயிரிழந்துள்ளதாக வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகியது. இதனால், அதிர்ச்சியடைந்த உலக கிரிக்கெட் ரசிகர்கள், இது வதந்தி என்று பின்னர் அறிந்து கொண்டனர். மேலும், இப்படியான தவறான தகவல்களை சமூகவலைத்தளங்களில் பகிர வேண்டாம் என்று ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தற்போது, பொல்லார்ட் அபுதாபி டி10 போட்டியில் விளையாடி வருகிறார். டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணிக்குத் தலைமை தாங்கி வருகிறார். சமூக வலைத்தள பக்கமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை பொல்லார்ட் பதிவிட்டு வருகிறார். இருப்பினும், இதுபோன்ற வதந்திகள் எப்படி பரவுகிறது என்று தெரியவில்லை என உலக கிரிக்கெட் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.