`எனக்கு மன அழுத்தம் இருந்தது உண்மைதான்: விராட் கோலி ஓபன் டாக்!

by Sasitharan, Feb 20, 2021, 20:15 PM IST

2014-ம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து தொடரின்போது மன அழுத்தத்தில் இருந்ததாக இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் 4 தொடர் கொண்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில், சென்னையில் நடைபெற்ற 2 போட்டிகளில் இங்கிலாந்து அணி 1 போட்டியிலும், இந்திய அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.

இதற்கிடையே, இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மார்க் நிகோலஸ் உடன் Not Just Cricket என்ற நிகழ்ச்சியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி உரையாடினார். அப்போது, 2014-ம் ஆண்டு இங்கிலாந்து தொடரின்போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துள்ளார். 2014 இங்கிலாந்து தொடரில் நீங்கள் சரியாக விளையாடவில்லை ஏன்? மன அழுத்தம் ஏற்பட்டதா? என்று கோலியிடம் மார்க் நிக்கோலஸ் வினவினார்.

அதற்கு பதிலளித்த விராட் கோலி , ஆம் எனக்கு மன அழுத்தம் இருந்தது. இதில் இருந்து எப்படி மீள்வது என புரியவில்லை. சில விஷயங்களில் இருந்து எப்படி கடந்து வருவது என்று சுத்தமாக தெரியவில்லை. இந்த உலகத்திலேயே தனித்து விடப்பட்ட நபர் போன்று அப்போது உணர்ந்தேன் என்றார். மேலும், நீங்கள் சரியாக ரன் சேர்க்காதபோது காலையில் எழுந்திருப்பதே ஒரு குற்ற உணர்வை தரும். சில கட்டங்களில் நீங்கள் எதையும் கட்டுப்படுத்த முடியாது என்று அனைத்து பேட்ஸ்மேன்களும் உணர்ந்ததாக நான் நினைக்கிறேன் என்றார்.

மேலும் விராட் கோலி கூறுகையில், ஒரு நபரின் வாழ்க்கையை மன அழுத்தம் அழித்துவிடும். பல கிரிக்கெட் வீரர்கள் மனநல பிரச்சினைகளுடன் பலரும் நீண்ட காலமாக போராடுகின்றனர். சில நேரங்களில் மாதக்கணக்கில், ஒரு ஆண்டு முழுக்க கூட இது தொடருகிறது. இதில் இருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர். இதிலிருந்து மீள்வதற்கு தன்னம்பிக்கை மிகவும் அவசியமாகிறது. உங்களுக்கு தன்னம்பிக்கை இருந்தால் மன அழுத்தத்தில் இருந்து மீளலாம் என்றும் விராட் கோலி கூறியுள்ளார்.

You'r reading `எனக்கு மன அழுத்தம் இருந்தது உண்மைதான்: விராட் கோலி ஓபன் டாக்! Originally posted on The Subeditor Tamil

More Cricket News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை