டெஸ்ட் போட்டிகளில் ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்க்கும் வண்ணமாய் டி20 தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. வெள்ளிக்கிழமை அகமதாபாத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்தியது. இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது இருபது ஓவர் போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தெரிவு செய்தது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்தின் பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறினர்.
இரண்டாவது ஓவரில் கே.எல்.ராகுலும், மூன்றாவது ஓவரில் கேப்டன் கோலியும், ஐந்தாவது ஓவரில் ஷிகர் தவானும் ஆட்டமிழந்தனர். ஷிரேயாஸ் ஐயர் 48 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை மட்டுமே எடுத்தது. பின்னர் களமிறங்கி இங்கிலாந்து அணியின் ஜேசன் ராயும், பட்லரும் இந்திய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். ஜேசன் ராய் 32 பந்துகளில் 49 ரன்கள் விளாசினார். பட்லர் 28 ரன்கள் எடுத்தார். 15.3 ஓவர்களிலேயே இங்கிலாந்து 130 ரன்களை குவித்து வெற்றியை சுவைத்தது. 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.