சபரிமலையில் பெண்களை அனுமதித்தால், தாய்லாந்தை போலவே பாலியல் சுற்றுலா மையமாக மாறும் என்று தேவஸ்தான தலைமை அதிகாரி அம்மாநில அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சபரிமலையில் பெண்கள் வயது வித்தியாசம் இல்லாமல் செல்வதற்கு அனுமதி கோரும் வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரிக்க உள்ளது.
சபரிமலை கோவிலுக்கு பத்து வயதிலிருந்து ஐம்பது வயதிற்கு இடைப்பட்ட பெண்கள் செல்ல முடியாது. இதை எதிர்த்து அனைத்து பெண்களும் வயது வித்தியாசம் இல்லாமல் அனுமதிக்கப்பட வேண்டும் என இந்திய இளம் பெண் வழக்கறிஞர்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
வயது வித்தியாசம் இல்லாமல் பெண்கள் சன்னிதானம் வரை செல்வதற்கு ஆதரவாக 2007இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.
ஆனால் அதன்பிறகு அதிகாரத்துக்கு வந்த காங்கிரஸ் கட்சி அரசு அதற்கு நேர் எதிரான நிலைபாட்டை எடுத்தது. சபரிலையில் காலங்காலமாக கடைப்பிடித்து வரும் நடைமுறையை மாற்ற முடியாது என அந்த அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
ஆனால் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு மீண்டும் ஆட்சி அமைத்ததும், சன்னிதானத்தில் வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்பதை நீதிமன்றத்தில் தனது நிலைபாடாக அறிவித்தது. இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சபரிமலைக் கோவில் நிர்வாகத்தின் தலைமை அதிகாரி கோபாலகிருஷ்ணன் கேரள அமைச்சர் காகம்பள்ளி சுரேந்திரனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “நீண்ட நெடுங்காலமாக பெண்களை சபரிமலையில் அனுமதிப்பது வழக்கம் இல்லை. நமது பண்பாட்டையும், பழைய பழக்கங்களையும் நாம் மதிக்க வேண்டும்.
சபரிமலைக்கு பெண்கள் வருவது அவர்களின் பாதுகாப்புக்கு உகந்தது இல்லை. இவ்வளவு கூட்டம் வரும் இடத்தில் பெண்களை அனுமதித்தால் பல தொந்தரவுகள் நேரும். இதனால் பல தவறான நடவடிக்கைகள் நடக்கலாம்.
பெண்களும் ஆண்களும் சேர்ந்து சபரிமலைக்கு வர ஆரம்பித்தால் மலையின் புனிதம் பாழாகும். பிறகு சபரிமலையும் தாய்லாந்தை போல ஒரு பாலியல் சுற்றுலா மையமாக மாறி விடும். இது தாய்லாந்து இல்லை; சபரிமலை” என தெரிவித்துள்ளார்.