தருமபுரி தனியார் கல்லூரி ஒன்றில் இரவில் புட்டு சாப்பிட்ட 5 மாணவிகளுக்கு திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
தருமபுரி மாவட்டம், வெத்தலைக்காரன்பள்ளம் பகுதியில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் தங்கி படிக்கும் மாணவிகள் தங்குவதற்கான விடுதி அருகிலேயே உள்ளது. இந்த விடுதியில் தங்கி படித்து வரும் காயத்ரி (வயது19), மோனிகா (19), கமலி (18), சர்மிளா (19), சுவேதா (18) ஆகிய 5 பேரும் நெருங்கிய தோழிகள் ஆவர்.
தோழிகளில் ஒருவர் நேற்றுமுன்தினம் விடுதிக்கு சாப்பிட புட்டு கொண்டு வந்துள்ளார். அதனை தோழிகள் 5 பேரும் சேர்ந்து சாப்பிட்டனர். பின்னர் மாணவிகள் அனைவரும் இரவு படுத்து தூங்கினர். நள்ளிரவில் புட்டு சாப்பிட்ட 5 மாணவிகளுக்கும் திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனை பார்த்த சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
சகமாணவிகள் விடுதி நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர். நிர்வாகத்தினர் உடனே அவர்களை சிகிச்சைக்காக 5 பேரையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து அதியமான்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவிகளின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளதாக தகவல்.