உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீதான பாலியல் புகார் குறித்து உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் 3 பேர் அடங்கிய குழு விசாரிக்க உள்ளது. இது போன்ற விசாரணை என்பது, 69 வருட உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாகும்.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அலுவலகம் மற்றும் இல்லத்தில் அவருக்கு உதவியாளராக பணியாற்றிய ஒரு பெண் ஊழியர் கடந்த சனிக்கிழமை ஒரு குண்டு போட்டார். தன்னை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அதன்பின் தன்னை டிஸ்மிஸ் செய்ததுடன் தனது குடும்பத்தையும் தொடர்ந்து துன்புறுத்தினார்கள் என்றும் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக, அனைத்து நீதிபதிகளுக்கும் ஒரு அபிடவிட்டையும் அனுப்பினார்.
இதையடுத்து, ஏப்.21ம் தேதி ஞாயிறன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையில் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு அவசரமாக அந்த பெண்ணின் புகாரை விசாரித்தது. அப்போது புகாரை மறுத்த தலைமை நீதிபதி, நீதித்துறையை சீர்குலைக்க சிலர் சதி செய்வதாக குற்றம்சாட்டினார். ஆனால், ஒரு நீதிபதி தன் மீதான குற்றச்சாட்டை தானே விசாரிப்பது எப்படி நியாயம்? என்று குரல்கள் ஒலித்தன. உச்சநீதிமன்ற வக்கீல்கள் சங்கமும் நியாயமான விசாரணையை வலியு
றுத்தியது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகள் கூட்டம் அவசரமாக நடத்தப்பட்டது. இதில் எடுக்கப்பட்டட முடிவின்படி, அந்த பெண் ஊழியரின் புகார் குறித்து மூத்த நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான குழு விசாரிக்க உள்ளது. இந்த குழுவில் நீதிபதிகள் என்.வி.ரமணா, இந்திரா பானர்ஜி இடம்பெற்றுள்ளனர். நீதிபதி பாப்டே அடுத்த தலைமை நீதிபதியாக வரும் நவம்பரில் பதவியேற்க உள்ளார். தநீதிபதி ரமணா 2021ல் தலைமை நீதிபதியாக வாய்ப்புள்ளது.
நீதிபதி பாப்டே குழு தனது விசாரணையை வரும் 26ம் தேதி துவக்க உள்ளது. முதல் கட்டமாக, பாலியல் கூறிய பெண் ஊழியருக்கும், உச்ச நீதிமன்ற செகரட்டரி ஜெனரலுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. செகரட்டரி ஜெனரலிடம் அந்த பெண் ஊழியர் பணியாற்றியது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
தலைமை நீதிபதி ஒருவர் மீதே பாலியல் புகார் வருவதும், அதை மூத்த நீதிபதிகள் குழு விசாரணை நடத்துவதும் 69 வருட உச்சநீதிமன்றத்தில் இதுவே முதல்முறை!