பொன்னமராவதி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நபர் திருச்சி விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டான். இதனையடுத்து இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் தங்கள் சமூககத்தை மாற்று சமூகத்தை சோ்ந்த சிலர் இழிவாக பேசி ஆடியோ வெளியிட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதேசமயம் அந்த அவதூறு ஆடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
இந்த சூழ்நிலையில், காவல்துறையினர் அந்த ஆடியோவை வெளியிட்ட நபரை கைது செய்யவில்லை என்று கூறி காவல்துறை வாகனங்கள் மற்றும் பொது மக்களின் வாகனங்களை சிலர் அடித்து நொறுக்கினர். மேலும் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலையில் மரங்களை வெட்டி போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அசம்பாவிதங்களை தடுப்பதற்காக பொன்னமராவதி உள்பட 30 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நிலவரம் கட்டுக்குள் வந்ததையடுத்து 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது.
இந்தநிலையில், பொன்னமராவதி கலவரத்துக்குக் காரணமான வீடியோவை வாட்ஸ்அப்-ல் வெளியிட்ட 3 பேரை போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன் அதிரடியாக கைது செய்தனர். பட்டுக்கோட்டையை சேர்ந்த செல்வகுமார், செல்வராஜ் மற்றும் வசந்த் ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், சிங்கப்பூரில் பணியாற்றிய செல்வவகுமாரை சென்னை வரவழைத்து போலீசார் கைது செய்து குறிப்பிடத்தக்கது.
இதுதவிர, இழிவாக பேசி ஆடியோ பதிவு செய்தவர்களில் சத்யராஜ் என்பவனை போலீசார் கைது செய்தனர்.
மேலும், கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக தஞ்சை மாவட்டம் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த சபரி, பாலாஜி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். ஒரு சிறுவனையும் பொன்னமராவதி போலீசார் பிடித்து வைத்துள்ளதாக தகவல். இதற்கிடையே சர்ச்சைக்குரிய ஆடியோவை பதிவு செய்த மற்றொரு நபரான சித்தனவாசலை சேர்ந்த முருகேசன் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த முருகேசனை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து பொன்னமராவதி ஆடியோ விவகாரம் தொடர்பாக போலீசார் இதுவரை கைது செய்தவர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.