இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதி சென்னையில் சிலரை சந்தித்ததாக வெளியான தகவலை அடுத்து, பூந்தமல்லி அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கி இருந்த 3 நபர்களிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் கடந்த சில தினங்களாக நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புகளில் 300க்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின் மூளையாக ஜஹ்ரன் ஹாசிம் என்ற தீவிரவாதி இருந்ததாக இலங்கை அதிகாரிகள் கூறினர். தீவிரவாதி ஹாசிமின் கூட்டாளியான ஹசன் என்ற தீவிரவாதியின் விவரங்கள் தற்போது கிடைத்துள்ளன.
இலங்கையில் தற்கொலை படை தாக்குதல் நடத்தி பலியான பயங்கரவாதிகளில் ஹசனும் ஒருவனாக இருக்கலாம் என சந்தேகம் உள்ளது. இந்த நிலையில் தீவிரவாதி ஹசன் தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு சென்னை மண்ணடிக்கு வந்து சென்றதாக தகவல் தேசிய புலனாய்வு அமைப்புக்கு கிடைத்தது.
இதையடுத்து பயங்கரவாதி ஹசன் யாரை சந்தித்தான் என உளவு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மண்ணடியில் ஒரு நபரை பிடித்து விசாரித்ததில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் சென்னை பூந்தமல்லியில் இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதனையடுத்து பூந்தமல்லியில் சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ள கோல்டன் அடுக்குமாடி குடியிருப்பில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது அந்த குடியிருப்பின் 11-வது மாடியில் வசித்து வரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் 3 பேரை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றனர். தீவிரவாதி ஹசன் சந்தித்த நபர்கள் இவர்களாக இருக்கலாம் என சந்தேகிப்பதால் அவர்களிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐஎஸ் அமைப்போடு தொடர்புடையவர்கள் சிலர் தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருப்பதால் இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் தமிழகத்திலும் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.