மழைக்காலத்தில் மறக்கக்கூடாத மூலிகைகள்

Teas that suitable for monsoon

by SAM ASIR, Jul 18, 2019, 16:45 PM IST

'மேகம் கறுக்குது; மழை வரப்பாக்குது; வீசியடிக்குது காத்து' என்று பாடக்கூடிய மழைக்காலம் வந்து விட்டது.

'குடை சார்... குடை மேடம்...'

'ரெயின்கோட்டு... ரெயின்கோட்டு...'

'மழை தொப்பி சார்.. மழை தொப்பி..' என்று சீசன் வியாபாரத்திற்கான குரல்கள் கேட்க ஆரம்பித்து விட்டன.

சடசடவென மழை பெய்யும்போது, எதையாவது சூடாக சாப்பிடவேண்டும் என்ற ஆசை தோன்றும். வறுத்த, எண்ணெயில் பொறித்த பண்டங்கள் சூடாக விற்பனையாகும்.

ஆனால், அவற்றை சாப்பிடுவது உடலுக்கு எந்த அளவுக்கு நன்மை செய்யும் என்று கூற இயலாது. பொறித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதேபோன்று சூடாக எதையாவது குடிக்கவேண்டும்போல் இருக்கும். காஃபி, தேநீர் என்று எதைக் குடித்தாலும் அதில் சர்க்கரை சேர்க்கிறோம். அதிகப்படியான சர்க்கரை உடல் எடை கூடுவதற்கான காரணங்களுள் ஒன்று! ஆகவே, சர்க்கரை சேர்த்த பானங்களை அடிக்கடி குடிப்பதை தவிர்ப்பதும் உடல்நல நோக்குதான்.

பிறகு என்னதான் குடிக்கலாம். இதோ, கீழ்க்காணும் மூலிகை பானங்களை குடித்தால், மழைக்காலத்தில் வருகிற இயல்பான உடல் உபாதைகளிலிருந்தும் தப்பிக்கலாம்.

இஞ்சி டீ:

'மழை' என்று சொல்லும்போதே நினைவுக்கு வரும் ஒரு பொருள் 'இஞ்சி'. எல்லா வீடுகளிலும் இருக்கக்கூடிய இந்த சாதாரண பொருள், உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். பருவகால உடல் உபாதைகளிலிருந்து காத்துக்கொள்ளும். பொதுவாக மழைக்காலத்தில் உணவு செரிமானமாவதற்கு சற்று காலதாமதமாகும். செரிமானத்தை தூண்டும் பண்பு இஞ்சிக்கு உண்டு. சாதாரண சளிக்கு இது நல்ல மருந்தாகும். அதேபோன்று மழைக்காலத்தில் நம் சுவாச குழலை சுத்தமாக காத்து, தொண்டைக்கு இதமளிப்பதில் இஞ்சிக்கு இணை வேறு ஏதும் இல்லை.

பெப்பர்மிண்ட் டீ:

புதினா வகையை சேர்ந்த மிளகுக்கீரை, மழைக்காலத்தில் உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்வு அளிக்கக்கூடியது. மழைப்பருவத்தில் வரக்கூடிய காய்ச்சலுக்கு பெப்பர்மிண்ட் டீ நல்ல மருந்து. இதில் காணப்படும் 'மென்தால்' என்ற பொருளுக்கு குளிர்விக்கும் ஆற்றல் உண்டு. மிளகுக்கீரை பானத்தை குடித்ததும், வியர்வை வெளியேறி உடல் குளிர ஆரம்பிக்கும். தொண்டை வலி போன்று தொண்டையில் ஏற்படும் பாதிப்புகளை இது சரி செய்யும்.

சீமைச்சாமந்தி டீ:

'கெமோமைல்' எனப்படும் சீமைச்சாமந்திக்கு கிருமிகளை எதிர்க்கும் பண்பு உண்டு. மனஅழுத்தத்தை குறைப்பதற்கும், ஆழ்ந்து உறங்குவதற்கும் காலங்காலமாக சீமைச்சாமந்தியை பயன்படுத்தி வருகின்றனர். நல்ல ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு ஆற்றல் இவற்றிற்கு சீமைச்சாமந்தி டீ ஏற்றது. எகிப்தியர் பழங்காலத்தில் இந்த பானத்தை கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது.

துளசி டீ:

ஆயுர்வேதத்தில் முக்கியமான இடம் துளசிக்கு உண்டு. பருவமழை சார்ந்த அனைத்து பிரச்னைகளுக்கும் துளசி ஒரே பரிகாரமாகும். சளி போன்ற ஃப்ளூ அறிகுறிகள், மழைக்கால ஒவ்வாமை, சுவாச பிரச்னைகள் எல்லாவற்றுக்கும் துளசி நல்ல தீர்வை தரும். நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து, தலைவலி, தொண்டை வலி ஆகியவற்றை குணமாக்கும்.

ஒயிட் டீ:

வெள்ளை தேநீர் என்பது, குறைவாக பதப்படுத்தப்பட்ட தேயிலையை கொண்டு தயாரிக்கப்படுவதாகும். வித்தியாசமான சுவை கொண்ட இத்தேநீர், ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் என்னும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களை கொண்டது. உடலிலுள்ள நச்சுப்பொருள்களை அகற்றி, நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும். சருமத்திற்கு மெருகு அளிப்பதோடு தொண்டைக்கும் இதம் தரும்.

சிவப்பு ஊலாங் டீ:

'ஊலாங்' என்பது சீன வகை தேயிலையாகும். ரெட் ஊலாங்கில் காஃபைன் அதிக அளவில் உள்ளது. மப்பும் மந்தாரமுமான அடைமழைநாளில் உடலுக்கு ஆற்றலை தரக்கூடிய பானம். ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் இருப்பதால், உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். சருமத்தை சுத்திகரிப்பதோடு தொண்டை வலிக்கு நல்ல மருந்தாக அமையும்.

You'r reading மழைக்காலத்தில் மறக்கக்கூடாத மூலிகைகள் Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை