ஒருநாளில் எத்தனை முறை சாப்பிடுவது நல்லது?

by SAM ASIR, Jul 23, 2019, 10:03 AM IST
Share Tweet Whatsapp

'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' இது காலங்காலமாக சொல்லப்பட்டு வரும் பழமொழி என்றாலும் இன்றும் அர்த்தமுடையதாகவே இருக்கிறது. மூன்றுவேளை உணவு என்பது நடைமுறையில் இருக்கும் வழக்கம். காலை சிற்றுண்டி, மதிய உணவு, இரவு உணவு என்று இவற்றை நாம் பிரித்திருக்கிறோம்.

மூன்றுவேளை மூக்கு முட்ட சாப்பிடுவதற்குப் பதிலாக ஐந்து வேளைகளாக அளவில் கொஞ்சமாக உண்டால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும் என்ற ஒரு நோக்கு உள்ளது.

மாறும் உணவுகளும் நேரமும்:

வழக்கமாக உணவு உண்ணும் நேர ஒழுங்கை மாற்றி, புதிய ஒழுங்கை கடைபிடிக்கும்போது, நாள் முழுவதும் குறிப்பிட்ட இடைவெளியில் உடலுக்கு உணவு கிடைக்கும். தினமும் இட்லி, தோசை, சப்பாத்தி, சோறு, குழம்பு என்று சாப்பிட்டு வந்த முறை மாறி, ஒழுங்கான ஓர் அட்டவணை தயாரித்து பலவகை உணவு பொருள்களை சாப்பிடக்கூடிய நிலை ஏற்படும்.

பெருந்தீனிக்கு வழியில்லை:

மூன்று வேளைக்குப் பதிலாக ஐந்துவேளை சாப்பிடுவதால், உடல் எடையை கட்டுக்குள் வைக்க முடியும். சிறிது சிறிதாக சாப்பிடுவதால் அதிகமாக சாப்பிடும் வழக்கம் மறைகிறது. எப்போதாவது சாப்பிடும்போது அளவுக்கு அதிகமாக சாப்பிட்டுவிடக்கூடிய நிலை உண்டு. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக அதிக வேளைகள் சாப்பிடுவதால், தேவைக்கு அதிகமாக தொண்டை வரைக்கும் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

பல்வகை சத்துமிக்க உணவு:

காய்கறிகள், பழங்கள், தானியங்கள், முட்டை, பால் சார்ந்த உணவு பொருள்கள் என்று வகைவகையாக ஒரே நாளில் சாப்பிட இம்முறை உதவுகிறது. இது வயிறுக்கு மட்டும் திருப்தி தருவதில்லை; ஆரோக்கியத்திற்கு ஏற்ற சத்துகள் உடலில் சேரவும் உதவுகிறது.
கட்டுப்பாட்டை கடைபிடிக்க உதவுகிறது:

ஒரு நாளைக்கு ஐந்து முறை சாப்பிடும்போது, எவற்றையெல்லாம் சாப்பிடுகிறோம்? அவற்றில் என்ன சத்துகள் உள்ளன என்பதை சீர்தூக்கி பார்க்க முடியும். பசியை அடக்குவதோடு மட்டுமின்றி, ஆரோக்கியமான சமச்சீர் உணவினை சாப்பிடவும் இப்புதிய ஒழுங்குமுறை வழிசெய்கிறது.

இனி மூன்று வேளைகளல்ல; ஐந்துவேளைகளாக சாப்பிடுங்கள்!

மழை வருது... மழை வருது... இவற்றை சாப்பிடாதீங்க!


Leave a reply