கர்நாடக மாநிலத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங் - மஜத கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதை காலம் தாழ்த்தி வருகிறது. அதிருப்தி எம்எல்ஏக்களை எப்படியாவது வளைத்து விடலாம் என்ற நப்பாசையில், நேற்றும் பல்வேறு நாடகங்களை நடத்தி, சட்டப்பேரவையில் நள்ளிரவு வரை நீடித்த விவாதம் கடைசியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே ஒத்திவைக்கப்பட்டது. இதனால் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு கட்டாயம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு, இரு கட்சிகளின் அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தால் பெரும்பான்மை இழந்து ஊசலாடிக் கொண்டிருக்கிறது. அதிருப்தி எம்எல்ஏக்களை எந்த வகையிலாவது சமாதானப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கையில், மெஜாரிட்டியை நிரூபிக்க, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என முதல்வர் குமாரசாமி அறிவித்தார்.
ஆனால் அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் அவர்களை சரிக்கட்ட முடியாமல் காங்கிரஸ் மற்றும் மஜத தலைவர்கள் திண்டாட்டத்துக்கு ஆளாகி விட்டனர். இதனால் தகுதி நீக்கம் செய்யப்படுவீர்கள் என்று மிரட்டல் விடுத்தும், அதிருப்தி எம்எல்ஏக்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க கட்டாயப்படுத்தக் கூடாது என்ற உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவை காரணம் காட்டி மசிய மறுக்கின்றனர்.
இதனால் கடந்த 18-ந் தேதி முதல்வர் குமாரசாமி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை தாக்கல் செய்த போதும் வாக்கெடுப்புக்கு தயாராகாமல் விவாதம் என்ற பெயரில் தாமதம் செய்து வருகின்றனர். ஆளுநர் வஜுபாய் வாலா 2 முறை கெடு விதித்தும், அதனை குமாரசாமி நிராகரித்து விட்டார்.
கடந்த வாரம் 2 நாட்களை விவாதம் என்ற பெயரில் தாமதப்படுத்திய நிலையில், சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பின் நேற்று சட்டப்பேரவை மீண்டும் கூடியது. பேரவை கூடும் முன் அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் நாளை (இன்று) காலை 11 மணிக்கு தம் முன் நேரில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவை சபாநாயகர் ரமேஷ்குமார் பிறப்பித்தார். தொடர்ந்து விவாதத்தை சீக்கிரம் முடியுங்கள். இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என்று சபாநாயகர் கண்டிப்புடன் கூறினார்.
ஆனால் நேற்றும் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றிய முதல்வர் குமாரசாமி தரப்பு, வாக்கெடுப்பை 2 நாட்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியபடியே நேரத்தை கடத்தினர். ஆனால் சபாநாயகரோ நள்ளிரவானாலும் சரி, வாக்கெடுப்பை நடத்தியே தீருவேன் என பிடிவாதமாக இருந்தார். இடையில் நேற்று மாலை முதல்வர் குமாரசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறார், ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் என்ற செய்திகளும் வேகமாக பரவின. கடைசியில் தமது கையெழுத்தை போலியாக போட்டு ராஜினாமா கடிதத்தை போலியாக தயாரித்து விட்டார்கள் என்ற குற்றச்சாட்டை முதல்வர் குமாரசாமி ஆதாரத்துடன் காட்டி சட்டசபையில் பிரச்னை எழுப்பினார்.
வாக்கெடுப்பை ஒத்தி வைப்பதிலேயே குறியாக இருந்த முதல்வர் குமாரசாமி தரப்பு, ஏதேதோ காரணங்களைக் காட்டி நள்ளிரவு வரை நேரத்தை கடத்தி விட்டது. கடைசியில் நாளை கட்டாயம் ஓட்டெடுப்பு நடத்த ஒத்துழைக்கிறோம் என காங்கிரஸ் தலைவர் சித்தராமய்யா உறுதி கொடுக்க நள்ளிரவு 11.45 மணிக்கு சபையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். மேலும் இன்று மாலை 4 மணிக்குள் விவாதத்தை முடிக்க வேண்டும். 6 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும். இது தான் கடைசிக் கெடு என்றும் சபாநாயகர் கண்டிப்புடன் கூறியுள்ளார். இதனால் இன்று ஒரு வழியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, குமாரசாமி அரசின் 14 மாத கால ஆட்சிக்கு முடிவு கட்டப்படும் என்றே தெரிகிறது.
ஜவ்வாக இழுக்கும் கர்நாடக குழப்பம்; நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பது இன்றும் சந்தேகம்