சர்க்கரை நோயை வெல்லுமா வெங்காயம்?

Advertisement

ஆண்டுதோறும் நவம்பர் 14ம் தேதி உலக நீரிழிவு நோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோரை பாதித்துள்ள இந்நோயை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்படியாய் இந்த தினம் குறிக்கப்பட்டுள்ளது. உலகில் உயிரிழப்புக்கான ஒன்பதாவது பெரிய காரணமாக நீரிழிவு பாதிப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. சராசரியாக 20 லட்சத்து 10 ஆயிரம் பேர் நீரிழிவால் உயிரிழக்கின்றனர். தற்போதுள்ள புள்ளிவிவரப்படி பெண்களில் 19 கோடியே 90 லட்சம் பேர் நீரிழிவு என்னும் சர்க்கரை நோய் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர் என தெரிகிறது. அவர்களில் ஐந்தில் இருவர் மகப்பேறு பருவத்தில் இருப்பவர்கள் என்பது அதிர்ச்சி தரும் உண்மை.

இன்சுலினை கண்டுபிடித்தவர்களுள் ஒருவரான ஃப்ரெட்ரிக் பேண்டிங் என்பவரின் பிறந்தநாளான நவம்பர் 14, உலக நீரிழிவு நாளாக அனுசரிக்கப்படுகிறது. 1922ம் ஆண்டு ஃப்ரெட்ரிக் பேண்டிங்கும் சார்லஸ் பெஸ்ட் என்பவரும் இணைந்து இன்சுலினை கண்டுபிடித்தனர். 1920ம் ஆண்டு டொரண்டோ பல்கலைக்கழகத்தில் ஜாண் மெக்லியாட் என்பவரின் வழிகாட்டுதலின் கீழ் கண்டுபிடிக்கப்பட்ட இன்சுலின், ஜேம்ஸ் காலிப் என்பவரின் உதவியால் சுத்திகரிக்கப்பட்டு அதன்பின் நீரிழிவு பாதிப்புக்கு சிகிச்சையளிக்க பயன்பாட்டுக்கு வந்தது.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைப்பதற்குத் தேவையான இன்சுலின் போதுமான அளவு சுரக்காத நிலை அல்லது இன்சுலினின் செயல்பாட்டுக்கு உடல் மறுவினை புரியாத நிலையே நீரிழிவு என்று அழைக்கப்படுகிறது.

நீரிழிவு பாதிப்பு வகை 1, வகை 2, வகை 3, பேறுகாலம் மற்றும் பாதிப்புக்கு முன்னான நிலை என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. நீரிழிவை குணமாக்கும் வைத்தியம் அறியப்படவில்லை. அதை கட்டுப்படுத்தவே முடியும்.

நீரிழிவை குறித்த தவறான நம்பிக்கைகள் பல மக்கள் மத்தியில் உள்ளன. அவற்றை கீழே காண்போம்.

முதுமையும் நீரிழிவும்
வயதானவர்களுக்கு மட்டுமே சர்க்கரை நோய் வரும் என்பது ஒரு தவறான நம்பிக்கை. நீரிழிவு பாதிப்பு எவ்வயதிலும் வரக்கூடும். முன்பு ஒன்றாம் வகை நீரிழிவு மட்டுமே குழந்தைகள் மற்றும் இளைஞர்களை பாதித்தது. தற்போது ஆரோக்கியமற்ற வாழ்வியல் முறையால் அதிகமானோரை பாதித்துள்ள பொதுவான பாதிப்பான இரண்டாம் வகை நீரிழிவும் இளைஞர்களுக்கு வருகிறது. இருபது மற்றும் முப்பது வயது பருவத்தினருக்கும் நீரிழிவின் இரண்டாம் வகை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நீண்டகாலம் மருந்து
பலர் நீரிழிவுக்காக மருந்துகள் சாப்பிட்டு, சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வந்ததும் மருந்து சாப்பிடுவதை மருத்துவரின் ஆலோசனையின்றி நிறுத்திவிடுகிறார்கள். நீரிழிவுக்கான மருந்தை தொடர்ந்து சாப்பிட்டால் சிறுநீரகம் பாதிக்கப்படும் என்ற நம்பிக்கையும் பொதுவாக காணப்படுகிறது. மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை நிறுத்தினால், நீரிழிவு பாதிப்பினால் சிறுநீரகங்கள், கண்கள், நரம்புகள், இருதயம், ஈரல் போன்றவை பாதிக்கப்படும். ஆகவே, மருத்துவரின் ஆலோசனையின்படி நடப்பதே பாதுகாப்பானது.

இரத்த பரிசோதனையின் முடிவு
ஏற்கனவே நீரிழிவு பாதிப்புள்ளோர் அல்லது இருக்கக்கூடும் என்று சந்தேக வட்டத்தில் இருப்போர் காலை வெறும் வயிற்றில் மற்றும் சாப்பிட்டு 2 மணி நேரத்திற்குப் பிறகு எடுக்கப்படும் இரத்த பரிசோதனையில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருந்தால் வேறு பரிசோதனைகள் தேவையில்லை என்று நம்புகின்றனர். இவை தவிர வேறு நேரங்களில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாயிருக்கக்கூடும். அப்படிப்பட்டவர்கள் HbA1c என்ற சோதனையை எடுத்தால் 3 மாதங்களில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு எப்படியிருந்துள்ளது என்பது தெரிய வரும்.

இனிப்பு சாப்பிடுதல்
சர்க்கரை இருக்கும் இனிப்புகள் அல்லது உணவுகளை சாப்பிடுவர்களை மட்டுமே நீரிழிவு பாதிக்கும் என்ற தவறான நம்பிக்கையும் உள்ளது. இனிப்பு மட்டுமல்ல, ஆரோக்கியமற்ற வாழ்வியல் முறையும் சர்க்கரை நோய் பாதிப்பை கொண்டு வரும். சரியான நேரத்துக்கு சாப்பிடாமை, தூங்கும் நேரம், அதிகமாக துரித உணவு மற்றும் எண்ணெய் உணவு பொருள்களை சாப்பிடுதல் போன்ற காரணிகளும் சர்க்கரை நோய்க்கு காரணமாகலாம். இந்தியாவில் வசிக்கும் நமக்கு மரபணு ரீதியாகவே இரண்டாம் வகை சர்க்கரை நோய் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புள்ளது.

பிரத்யேக உணவு
மருத்துவரின் ஆலோசனையே உணவுகளை தீர்மானிக்கும். ஆனால், நீரிழிவு பாதிப்புள்ளோருக்கான உணவு முறை அவர்களுக்கு மட்டுமே பொருந்துவது அல்ல. அதை அனைவரும் கடைபிடிக்கலாம். மூன்று வேளை அதிகமாக சாப்பிடுவதற்கு பதிலாக பலமுறை சிறு சிறு அளவில் சாப்பிடவேண்டும். பழங்கள், காய்கறிகள் இவற்றை அதிகமாக சாப்பிடவேண்டும். பதப்படுத்தப்பட்ட மற்றும் பேக்கரி உணவு பொருள்களை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும். நார்ச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடுதல், அதிகமான நீர் அருந்துதல், போதுமான நேரம் உறங்குதல், தினமும் 30 முதல் 40 நிமிடங்கள் வேகமாக நடத்தல் ஆகியவற்றை அனைவரும் கடைபிடிக்கவேண்டும்.

இன்சுலின்
இன்சுலின் ஊசி போட்டுக்கொள்வது உடலை பாதிக்கும் என்று சிலர் நம்புகின்றனர். மாத்திரைகளால் சர்க்கரை கட்டுப்படுத்தப்படாவிட்டால் மட்டுமே மருத்துவர் இன்சுலினை பரிந்துரைக்கிறார். சிலருக்கு தற்காலிகமாகவும் சிலருக்கு நிரந்தரமாகவும் இன்சுலின் தேவைப்படும். சர்க்கரையை கட்டுப்படுத்த அது சரியான மருந்து ஆகும்.

சர்க்கரையும் வெங்காயமும்
சர்க்கரையின் அளவை பொறுத்தமட்டில் உணவே முக்கிய பங்கு வகிக்கிறது. சர்க்கரையை கட்டுப்படுத்த பல உணவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. அவற்றுள் ஒன்று வெங்காயம். Environmental Health Insights என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு முடிவு, வெங்காயம் சாப்பிடுவதால் முதல் மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு பாதிப்புள்ளோருக்கு இரத்தத்தில் குளூக்கோஸ் அளவு குறையும் என்று கூறப்பட்டுள்ளது. வெங்காயம் மெதுவாக செரிமானம் ஆகும்; இரத்த மண்டலத்தினுள் மெதுவாக சர்க்கரையை வெளியிடும். இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டெண் கொண்டது. அதாவது குறைந்த அளவு சர்க்கரையை உடலில் சேர்க்கக்கூடியது.

வெங்காயத்தை சூப், சாலட், சாண்ட்விச் போன்றவற்றில் சேர்த்தும் சாப்பிடலாம். வெங்காய நீர் தயாரித்தும் பருகலாம்.

வெங்காய நீர்
தேவையானவை: வெங்காயம் - 2, தண்ணீர் - 1 கோப்பை, எலுமிச்சை - அரை, இந்துப்பு - 1 சிட்டிகை, தேன் - தேவையான அளவு
செய்முறை: வெங்காயத்தை நறுக்கவும். எலுமிச்சையை பிழிந்து ஒரு மேசை கரண்டி சாற்றினை சேர்க்கவும். எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் அடித்துக்கொள்ளவும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சோதித்து, தேன் சேர்க்கலாம் என்ற நிலையில் உள்ளவர்கள் மட்டுமே தேன் சேர்க்கவேண்டும். மற்றவர்களை தேனை தவிர்க்கவேண்டும். வெங்காயத்தின் நெடியை குறைக்கவே உப்பு சேர்க்கப்படுகிறது. உப்பை குறைக்கவேண்டியவர்கள் உப்பை தவிர்க்கவும். நன்றாக நீரில் அடிக்கப்பட்ட பின் வடிகட்டாமல் அருந்தவும்.

சர்க்கரையை கட்டுப்படுத்துவதுடன், அதில் உள்ள ஆக்ஸிஜேனேற்ற தடுப்பான்கள் (ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள்) சருமத்திற்கும் ஆரோக்கியம் தரும்.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-check-oxygen-concentration-if-doubted-as-covid-19-infected-and-ways-to-fight-with-covid-19
கோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி?
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
foods-that-help-to-boost-immunity-to-fight-against-infections-and-cold-full-of-vitamin-c
கொரோனா பரவல்: இயற்கையாக நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவுகள்
penugreek-tea-to-keep-lung-healthy-and-to-help-fight-against-infection-in-pandemic-season
கொரோனா காலம்: நுரையீரலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ
herbs-that-help-to-shed-kilos-and-reduce-waist-cicumference-their-medicinal-benefits-and-methods-to-take-them
கொரோனா ஊரடங்கு: இடுப்புச் சதை குறைய எதை சாப்பிடலாம்?
tricks-make-sure-to-beat-the-heat-with-fennel-vetiver-and-sandalwood-paste
கோடைக்காலத்தில் சரும பாதுகாப்புக்கான இயற்கை முறைகள்
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
improving-immune-health-help-to-activate-over-300-enzymes-and-aid-to-cell-division-cell-growth
இரத்த ஓட்டத்தை சீராக்கும்... நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்
the-lentil-that-manage-symptoms-of-diabetes-helping-for-weight-loss-could-prevent-from-heat-stroke-and-beneficial-for-pregnant-women
ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து பாதுகாக்கும்... சிசுவுக்கு நல்லது...
steaming-for-coron-treatment-what-are-the-things-you-should-not-forget
கொரோனா: நீராவி பிடிப்பது எவ்விதம் பயன் தரும்?
/body>