மன நலம், உடல் நலம் இரண்டுமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. மன நலம் நன்றாக இருந்தால்தான் உடல் நலம் நன்றாக இருக்கும். மனதில் உள்ள பிரச்சினைகள் உடலிலும், உடலில் உள்ள பிரச்சினைகள் மனதிலும் எப்போதும் பிரதிபலிக்கும். அதனால் இரண்டையும் சீராக வைத்துக்கொள்வது நம் ஆரோக்கியத்திற்கு மிக அவசியம்.
மன– உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது அமுக்கரா கிழங்கு. உடலுக்கு ஊட்டமளித்து சக்தியையும், மனதிற்கு உற்சாகத்தையும் வழங்குவதில் வல்லது.
இந்த கிழங்கு கசப்பு சுவை கொண்டது. வாதநோய், நரம்பு தளர்ச்சி, கை– கால் நடுக்கம், மன சோர்வு, தூக்கமின்மை, முதுமையில் ஏற்படும் சோர்வு போன்றவற்றிற்கு சிறந்த மருந்து. பலவீனமான உடலுக்கு இது தெம்புதரும். இதய துடிப்பை சீராக்கும். மனஉளைச்சலில் இருந்து விடுதலைதரும். மூளை செல்களை தூண்டி அதிக புத்துணர்ச்சியை வழங்கும்.
பெண்கள் அமுக்கரா கிழங்கை உணவில் சேர்த்துக்கொண்டால் அதிக பலன் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். தைராய்டு சுரப்பிகளின் செயல்பாடுகளை சீராக்கும். ஹார்மோன் சமச்சீரின்மையால் மாதவிடாய் கோளாறுகள், குழந்தை பேறின்மை போன்றவை ஏற்படும். அதையும் இந்த கிழங்கு சீர்செய்யும். ஆண்களுக்கு இளமையிலேயே ஏற்படும் தலை வழுக்கை, ஆண்மைக் குறைபாடு போன்றவைகளையும் சரிசெய்யும்.
புற்று நோயால் சிலருக்கு கட்டிகள் ஏற்படும். அதை அமுக்கரா கிழங்கு கட்டுப்படுத்தும். நீரிழிவு நோய் அதிகப்பட்டால் நரம்புகள் பாதிக்கப்படும். உள்ளங் காலில் ஒருவித மதமதப்புதன்மை தோன்றும். கால் எரிச்சலும் தோன்றும். ஞாபக மறதி, கை–கால் நடுக்கம் போன்றவைகளும் தோன்றும்.இவைக்கு அமுக்கரா கிழங்கு நல்ல மருந்தாகும்.
இட்லி அவிக்கும் பாத்திரத்தில் அரைலிட்டர் பாலுடன் சிறிதளவு நீர் கலந்து ஊற்ற வேண்டும். மேல்தட்டில் ஒரு துணியை விரித்து அதில் அமுக்கரா கிழங்குகளை பரப்பி வேக வைக்கவேண்டும். பின்பு அவைகளை உலர்த்தி தூளாக்கிக் கொள்ள வேண்டும். இதுவே அமுக்கரா பொடியாகும். அதனை சேமித்து வைத்து தேவைக்கு பயன்படுத்தவேண்டும்.