கொல்கத்தாவில் நாளை நடக்கும் எதிர்க்கட்சி தலைவர்களின் மகா சங்கமம் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்களின் பிரமாண்ட கூட்டம் நாளை கொல்கத்தாவில் நடக்கிறது. இதில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, கர்நாடக முதல்வர் குமாரசாமி, டெல்லிட முதல்வர் கெஜ்ரிவால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட நாடு முழுவதும் இருந்து பா.ஜ.க. தவிர்த்து பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
காங்கிரஸ் தலைவர் இந்த மாநாட்டில் பங்கேற்பதை தவிர்த்தது பல கேள்விகளை எழுப்பியது. தம்மை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த மம்தா ஆதரவளிக்காததே ராகுலின் புறக்கணிப்புக்கு காரணம் என்றும் தகவல்கள் வெளியாகின.
இந்தச் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மம்தாவுக்கு ராகுல் காந்தி வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.
ஒட்டு மொத்த எதிர்க் கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சி வெற்றி பெற தம்முடைய ஆதரவும் உண்டு என ராகுல் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை வலிமையான இந்தியாவை உருவாக்கும் என்றும் ராகுல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.