புதுடெல்லி: ஐந்து ஆண்டுக்கால ஆட்சி முடிவடையும் நிலையில், திரிபுரா, மேகாலயா, நாகலாந்து ஆகிய மாநிலங்களில் வரும் பிப்ரவரி மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேகாலயா, நாகலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: மேகாலயா, நாகலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. இதனால், இன்று முதல் அந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்படுகின்றன.
மேலும், திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 18ம் தேதியும், மேகாலயா மற்றும் நாகலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27ம் தேதியும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும். மூன்று மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் மார்ச் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.