தமிழக காங்கிரஸ் கமிட்டியில் கோஷ்டி பூசல் ஒருநாளும் ஓய்ந்துவிடாது என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. தற்போது திருநாவுக்கரசருக்கு எதிராக புகார் தெரிவிக்க டெல்லியில் முகாமிட்டிருக்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
தினகரனுடன் கூட்டணி அமைக்க திருநாவுக்கரசர் முயற்சித்தார். ஆனால் சோனியாவின் தலையீட்டால் அது நிறைவேறவில்லை.
திமுகவைப் பொறுத்தவரை திருநாவுக்கரசரை ‘நம்பகத் தன்மை’ இல்லாத தலைவர் என்கிற கருத்துடன் இருக்கிறது. அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத திருநாவுக்கரசர், கட்சியில் தமது ஆதரவாளர்கள் மட்டுமே பொறுப்புகளில் இருக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் இருந்து வருகிறது.
அண்மையில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் ஆதரவாளர்கள் சிலரை பொறுப்புகளில் இருந்து திருநாவுக்கரசர் நீக்கிவிட்டார். இது இளங்கோவன் தரப்பை மிகவும் கொந்தளிக்க வைத்திருக்கிறது.
இந்த கொந்தளிப்பு அடங்குவதற்குள் சத்தியமூர்த்தி பவனில் இன்னொரு களேபரம் நடந்துவிட்டது. திருநாவுக்கரசரால் நீக்கப்பட்ட இளங்கோவன் ஆதரவாளர்கள், சத்தியமூர்த்தி பவனில் தலைகாட்டியிருக்கின்றனர்.
இதை கடுமையாக கண்டித்திருக்கிறார் திருநாவுக்கரசர். இதற்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் சத்தியமூர்த்தி பவனிலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆவேசப்பட்டிருக்கிறார். அவரை மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் சமாதானப்படுத்த முயற்சித்திருக்கிறார்.
ஆனாலும் ஆத்திரம் அடங்காத இளங்கோவன் சத்தியமூர்த்தி பவன் ஆலோசனை கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்திருக்கிறார். தற்போது இந்த விவகாரத்தைத்தான் டெல்லி மேலிடத்தில் புகாராக தெரிவிக்க முகாமிட்டிருக்கிறாராம் இளங்கோவன்.
எழில் பிரதீபன்