கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்த்தே தீருவோம் என்பதில் பாஜக அடம்பிடித்து வருகிறது. ஆளும் கட்சி எம்.எல்.ஏ ஒருவரிடம் நேற்று கூட மிகப் பெரும் தொகையை முன்வைத்து பாஜக பேரம் பேசியதாக அம்மாநில முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடகாவில் குமாரசாமி அரசை கவிழ்க்க ஆபரேஷன் கமலா என்ற பெயரில் பாஜக முயற்சித்தது. ஆனால் பாஜகவின் இந்த அடாவடித்தனம் தோல்வியில் முடிவடைந்தது.
ஆளும் தரப்பில் இருந்து 4 எம்.எல்.ஏக்களை மட்டும்தான் பாஜகவால் வளைக்க முடிந்தது. அந்த 4 பேருக்கும் காங்கிரஸ் மேலிடம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, பாஜகவின் ஆபரேஷன் கமலா இன்னமும் தொடர்கிறது, எங்கள் தரப்பு எம்.எல்.ஏ. ஒருவரை பாஜக தரப்பு நேற்று தொடர்பு கொண்டு பேரம் பேசியது,
மிகப் பெரும் தொகையை பேரமாக தருவதாக உறுதியளித்திருக்கிறது பாஜக தரப்பு. அந்த தொகையை கேட்டாலே நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். எங்கள் தரப்பு எம்.எல்.ஏ. அதை நிராகரித்துவிட்டார். இன்னமும் குதிரை பேரத்தை பாஜக தொடர்ந்து நடத்தி வருவதை என்பதையே இது அம்பலப்படுத்துகிறது என்றார் குமாரசாமி.