இவர் போன்று எளிமை, பணிவு கொண்ட தலைவர்கள் தான் நாட்டுக்குத் தேவை என ராகுல் காந்தியை கோவா பாஜக எம்எல்ஏ புகழ்ந்து தள்ளியுள்ளார்.
ஓய்வுக்காக தனிப்பட்ட பயணமாக தாய் சோனியாவுடன் கோவா சென்றிருந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி, கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை கடுமையாக விமர்சித்து டிவிட்டரில் முதல்நாள் பதிவிட்டிருந்தார். மறுநாளோ டிவிட்டரில் கோவா முதல்வரை காலையில் நேரில் சந்தித்தேன். தனிப்பட்ட முறையிலான இந்த சந்திப்பில் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தேன் என பதிவிட்டு அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருந்தார்.
மனோகர் பாரிக்கரின் மீதான ராகுல்காந்தியின் இந்தத் திடீர்ப் பாசம் அம்மாநில பாஜக எம்எல்ஏவும், துணை சபாநாயகருமான மைக்கேல் லேபோவை வெகுவாக கவர்ந்து விட்டது போலும், ராகுலை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
அத்துனை உயரமான ராகுல் காந்தியிடம் என்னா எளிமை.... என்னா பணிவு ... இதைப் பார்த்து நான் மயங்கி விட்டேன். இப்படிப்பட்ட தலைவர்கள் தான் கோவாவுக்கும் சரி, நாட்டுக்கும் தேவை என்று டிவிட்டரில் புகழ்ந்துள்ளார். ராகுலை புகழ்ந்த பாஜக எம்எல்ஏவை சொந்தக் கட்சியினர் என்ன பாடு படுத்தப் போகிறார்களோ என்று கோவா காங்கிரசாரே உச் கொட்டும்படி மைக்கேல் லோபோ புகழ்ந்துள்ளார்.