watchdog Transparency International என்ற சர்வதேச தன்னார்வ நிறுவனம் உலக அளவில் ஊழல் மிகுந்த நாடுகள் குறித்த ஆய்வை மேற்கொண்டு வந்தது.
அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் ஊழலை அடிப்படையாகக் கொண்டு 180 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது .இதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்தப் பட்டியலில் சோமாலியா, தெற்கு சூடான், சிரியா ஆகிய நாடுகள் முதல் முன்று இடங்களைப் பிடித்துள்ளன. வறட்சி, போர், முதலான விஷயங்களால் சிக்கி தவித்து வரும் இந்த நாடுகளில் லஞ்சம், ஊழல் அதிக அளவில் தலைவிரித்தாடுகிறது.
இந்தப் பட்டியலில் இந்தியா 78-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இந்தியா 81-வது இடத்திலிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் நம்மை விட மக்கள் தொகை அதிகம் கொண்ட சீனாவோ, கடந்த ஆண்டைவிட 10 இடங்கள் பின்தங்கி 87-வது இடம் பிடித்துள்ளது. சீனாவின் இந்த திடீர் முன்னேற்றத்துக்கு அதிபர் ஜி ஜின்பிங்கின் ஊழலுக்கு எதிரன அதிரடி நடவடிக்கைகளே காரணம் எனக் கூறப்படுகிறது. இந்தப் பட்டியலில் அண்டை நாடுகளான இலங்கை 89-வது இடத்திலும், பாகிஸ்தான் 117-வது இடத்திலும், நேபாளம் 124-வது இடத்திலும், வங்கதேசம் 149-வது இடத்திலும் உள்ளன. அதேநேரம் மிகுந்த கட்டுப்பாடுகள் கொண்ட வடகொரியா இதில் 176-வது இடத்தையும், ரஷ்யா 138வது இடத்தையும் பிடித்துள்ளது.
இதேபோல் ஊழல் மிகக் குறைந்த நாடுகளின் பட்டியலில் டென்மார்க் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. கடந்த ஆண்டு முதல் இருபது இடங்களுக்குள் இந்தப் பட்டியலில் இருந்த அமெரிக்கா 22-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. மேலும் ஜப்பான் 18-வது இடமும், ஆஸ்திரேலியா 12-வது இடமும் பிடித்துள்ளன.
இந்த அறிக்கையில் முக்கியமாக குறிப்பிடப்பட்டுள்ளது என்னவென்றால், ``எந்த நாட்டிலும் ஊழல் இல்லாமல் இல்லை. எல்லா நாடுகளிலும் பரவியுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.