காந்தி நினைவு நாளில் அவருடைய படத்தை துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம் நடத்திய இந்து மகாசபாவினரின் செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தேசத் தந்தை எனப் போற்றப்படும் மகாத்மா காந்தியின் 71-வது நினைவு தினமான நேற்று, நாடு முழுவதும் குடியரசுத் தலைவர் முதல் சாமானியன் வரை அவருக்கு மலரஞ்சலி செலுத்தி துக்க தினமாக அனுசரித்தனர்.
ஆனால் உ.பி.மாநிலம் அலிகாரில் இந்து மகாசபாவினர் காந்தி நினைவு தினத்தை கொண்டாட்டமாக ஆடித் தீர்த்தது சர்ச்சையாகி உள்ளது.
மகாத்மா காந்தியின் படத்தை வைத்து துப்பாக்கியால் சுட்டு விளையாடியுள்ளனர். இதனைச் செய்தது இந்து மகா சபையின் தேசியச் செயலாளரான பூஜாஷாகுன் பாண்டே என்ற பெண்மணி.
அத்துடன் காந்தியை உண்மையிலேயே சுட்டுக்கொன்ற கோட்சே படத்துக்கும் மாலை அணிவித்து கொண்டாடியுள்ளனர்.
இந்தக் காட்சிகளையெல்லாம் வீடியோவாக எடுத்து, ராவண வதம் செய்வது போல ஆண்டு தோறும் காந்தி நினைவு தினத்தை இப்படித்தான் கொண்டாடுகிறோம் எனக் கூறி பேஸ்புக்கில் பூஜா பாண்டே பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைர லாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்து மகாசபாவினர் நடத்திய இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் பெரும் கண்டனக் குரல் எழ, இந்து சபா தேசியச் செயலாளர் பூஜா ஷா குன்பாண்டே உட்பட 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருவதாக அறிவித்துள்ளனர்.