நாட்டின் மன்னர் - அதிபர் போல நினைத்துக் கொள்ளும் மோடி.... வெளுத்து வாங்கிய முரசொலி

அரசியல் அமைப்புகளின் கூறுகளை நாட்டின் மன்னர் - அதிபர் போல நினைத்து கூறுபோடுகிறார் பிரதமர் மோடி என சாடியுள்ளது திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி சாடியுள்ளது.

முரசொலியின் தலையங்கம்:

இது, ஜனநாயகப் படுகொலை; அரசியலமைப்புச் சட்டத்தையே ஏமாற்றுவது; மக்களுக்குச் செய்யும் துரோகம்!

எது ஜனநாயகப் படுகொலை? அரசியலமைப்புச் சட்டத்தையே ஏமாற்றுவது எது? மக்களுக்குச் செய்யும் துரோகம் எது?

மக்கள் பிரதிநிதிகளே இல்லாமல் 18 சட்டமன்றத் தொகுதிகள் 15 மாதங்களாக இருப்பது ஜனநாயகப் படுகொலை இல்லையா? இலட்சக்கணக்கான மக்களும் சட்டமன்றத்துக்குள் வரமுடியாது என்பதால் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதி சபைக்குள் வந்து, அந்த லட்சக்கணக்கான மக்களின் குரலை சட்டமன்றத்துக்குள் ஒலிப்பதுதான் ஜனநாயகம் என்றால் - அப்படி ஒரு பிரதிநிதியையே இல்லாமல் செய்து விடுவது ஜனநாயகப் படுகொலை அல்லாமல் வேறென்ன?

இப்படிப்பட்ட ஜனநாயகப் படுகொலையைச் செய்வது யார்? எடப்பாடியா? அவருக்கு கொலை என்ற சொல் பழக்கமானதுதான்! நரேந்திர மோடியா? “குஜராத் படுகொலைகள்' உலகத்தை அதிர வைத்தவை!

இங்கே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியது தேர்தல் ஆணையம். தேர்தல் நடத்துவதைத் தவிர இவர்களுக்கு வேறு எந்த வேலையும் இல்லை. அந்த ஒரு வேலை மட்டும்தான், அவர்கள் வேலை. அதையும் பார்க்காத ஆணையம், தேர்தல் ஆணையம் என்று எப்படி பேர் பெறும்?

தமிழகத்தில் இப்போது மொத்தம் 21 சட்டமன்றத் தொகுதிகளின் இடம் காலியாக இருக்கிறது. இதில் திருவாரூர், திருப்பரங்குன்றம், ஓசூர் ஆகிய மூன்று தொகுதிகளும் காலியாகி ஆறு மாதங்கள் ஆகவில்லை. ஆனால் திருவாரூருக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவித்து, அத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. எதற்கு அறிவித்தார்கள். எதற்கு ரத்து செய்தார்கள் என்பது நாட்டுக்கும். நாட்டு மக்களுக்கும் தெரியாது.

மற்ற 18 தொகுதிகளும் 15 மாதங்களாக காலியாக இருக்கின்றன. ஒரு தொகுதி காலியிடம் என்று அறிவிக்கப்பட்டதும் ஆறு மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ம் நாள் பறிக்கப்பட்டது. பதவி பறிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் நீதிமன்றம் சென்றார்கள். இவர்களைத் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று 25.10.2018 அன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. இந்த மூன்று மாதத்திலாவது தேர்தல் நடத்த ஆணையம் முயற்சித்திருக்க வேண்டும். ஏற்கனவே 12 மாதம் ஆகிவிட்டது; உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும்' என்று ஆணையம் முடிவெடுத்திருக்க வேண்டும். அதன் பிறகும் பக்கவாதம் வந்தவர் போலவே படுத்துக்கிடந்தது தேர்தல் ஆணையம். இன்னமும் அப்படித்தான் கிடக்கிறது.

18 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயங்குவது ஏன்? தயக்கத்துக்கு ஒரே காரணம் தான்....

காலியாகவுள்ள தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தால் அனைத்துத் தொகுதிகளிலும் தி.மு.க. வென்றுவிடும் என்பதுதான்!

இந்த அரசியல் காரணம் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கலாம். நரேந்திர மோடிக்கு இருக்கலாம். ஆனால் தேர்தல் ஆணையத்துக்கு எப்படி இருக்க முடியும்? அப்படி இருந்தால் அது தேர்தல் ஆணையம் அல்ல. ஆளும்கட்சி ஆணையம்!

எனவேதான், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் ஆணையத்தின் வரலாற்றுப் பிழை என்று கண்டித்துள்ளார். 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்தாவிட்டால் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும்” என்றும் அறிவித்துள்ளார். ஜனநாயக சக்திகளின் உண்மை எண்ணம் இதுவாகத்தான் இருக்கும்.

சி.பி.ஐ., மத்திய கண்காணிப்பு ஆணையம், இந்திய ரிசர்வ் வங்கி, தகவல் ஆணையம், வருமானவரித்துறை ஆகியவற்றின் வரிசையில் தேர்தல் ஆணையத்தையும் தனது அரசியல் உள்நோக்கத்துக்கு மோடி பயன்படுத்துவது அரசியலமைப்பு சட்டத்துக்கு செய்யும் துரோகம்.

'எனக்கு ஒரே ஒரு புனித நூல்தான் உண்டு - அது அரசியலமைப்பு சட்டப் புத்தகம்தான்' என்று பிரதமர் ஆவதற்கு முன் சொன்ன மோடி, தனது ஐந்தாண்டு காலத்தில் அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதற்கான காரியங்களைத்தான் செய்து வருகிறார்.

''நல்ல அரசியல் அமைப்புச் சட்டமாகவும் இருக்கலாம் - மோசமான அரசியலமைப்புச் சட்டமாகவும் இருக்கலாம். எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டமாகவும் இருக்கலாம் - எழுதப்படாத அரசியலமைப்புச் சட்டமாகவும் இருக்கலாம். அல்லது இரண்டும் இணைந்ததாகவும் இருக்கலாம். ஆனால் அரசியல் அமைப்புச் சட்டமின்றி அரசுமில்லை - நாடு மில்லை '' என்றார் ஸ்விஷர்.

தன்னை இந்த நாட்டின் மன்னர் - அதிபர் போல நினைத்துக் கொள்ளும் மோடி, ஜனநாயக அரசியலமைப்பின் கூறுகளை, கூறு போட்டு வருவதன் அடையாளம்தான் 15 மாதங்களாக 18 தொகுதிகளுக்குத் தேர்தல் நடத்தவிடாமல் தடுப்பது.

நரேந்திர மோடி அரசியலமைப்புச் சட்டத்தை, ஜனநாயக நெறிமுறைகளை, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒரு தூணைச் சிதைப்பது யாருக்காக? அ.தி.மு.க. என்ற கொள்ளைக் கூட்டத்துக்காக என்பதுதான் கேவலமானது.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவும், தேர்தல் ஆணையர் அசோக் லாவாசாவும் யாருக்காக இந்த சதியைச் செய்கிறார்கள் என்றால் எடப்பாடி பழனிசாமிக்கு என்பதுதான் மிகமிகக் கேவலமானது.

இந்த ஜனநாயகப் படுகொலைக்கான தண்டனை என்ன? இதைவிட தேசத் துரோகம் என்ன இருக்க முடியும்?

இவ்வாறு முரசொலி தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளது.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

Recent News