நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸின் மெகா கூட்டணியில் சேராமல் காங்கிரஸ் கட்சிக்கு டிமிக்கி கொடுத்தார்கள் உத்தரபிரதேச தலைவர்களான அகிலேஷும்,- மாயாவதியும். காங்கிரஸை நைசாக கழட்டிவிட்ட இவர்கள், தலா 38 தொகுதிகளை பிரித்து கூட்டணியை உறுதி செய்து தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். இவர்களின் புதிய கூட்டணியால் உத்தரபிரதேசத்தில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்த பின்னடைவை சமாளிப்பதற்காக, உத்தர பிரதேசத்தில் வலுவான இடத்தை பெற தீர்மானித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது சகோதரி பிரியங்கா காந்தியை களமிறக்கினார். அவரை உத்தர பிரதேசத்தின் கிழக்குப் பகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமித்தார். இதுவரை நேரடி அரசியலில் ஈடுபடாத பிரியங்காவின் வருகை உத்தர பிரதேச காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ, புல்பூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் தொண்டர்கள் பிரியங்கா காந்தியை இன்று சந்தித்தனர். அப்போது பிரியங்கா காந்தியிடம் லக்னோ, புல்பூர் தொகுதியில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தினர்.
அவர்களின் வேண்டுகோளை நிராகரித்த பிரியங்கா, ``வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடபோவதில்லை'' எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் வரும் 2022-ஆம் ஆண்டு நடைபெறும் உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலே எனது இலக்கு என்றும், காங்கிரஸ் கட்சியை உத்தரபிரதேசத்தில் மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதே எனது குறிக்கோள் என்றும் கூறியுள்ளார்.
தொண்டர்கள் பிரியங்காவை தேர்தலில் போட்டியிட சொல்வதற்கு காரணம் புல்பூர் தொகுதி காங்கிரஸ் கட்சியின் பராம்பரிய தொகுதியாக மட்டும் இல்லை. ஜவஹர்லால் நேரு போட்டியிட்ட தொகுதியும்கூட....