காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பொது மேடையில் பெண் தொண்டர் ஒருவர் முத்தம் கொடுத்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளதை அடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. முதல்முறையாக தன்னை முன்னிறுத்தி நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. இதனால் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார். அந்தவகையில் இன்று பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டம், லால்டுங்ரி பகுதியில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் இன்று பிற்பகலில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தான் ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் பேசிமுடித்த பிறகு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் தொண்டர்கள் 5 பேர் ராகுல்காந்திக்கு மலர்மாலை அணிவிக்க மேடையேறினர். மாலை அணிவித்த பிறகு அந்த ஐந்து பெண்களில் ஒரு பெண் திடீரென ராகுல்காந்தியின் கன்னத்தில் முத்தம் கொடுத்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ராகுல் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போனார்.
பின்னர் ஒருவழியாக ஒரு சிறிய புன்னகையை உதிர்த்துவிட்டு மேடையில் உட்கார்ந்துகொண்டார். இந்த காட்சிகள் வீடியோவாகவும், புகைப்படங்களாகவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காதலர் தினத்தில் இந்த சம்பவம் நடந்ததால் பலரும் ராகுலுக்கு இது காதலர் தின ட்ரீட் என கமெண்டுகளை தட்டிவிட்டு வருகின்றனர். ஏற்கனவே கர்நாடக முதல்வர் சித்தராமையாவை இதுபோல் ஒரு பெண் தொண்டர் மேடையில் வைத்து முத்தம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.