`கடைசி முத்தம் சல்யூட் - ராணுவ வீரரின் இறுதிச்சடங்கில் கண்கலங்க வைத்த மனைவியின் பாசப்போராட்டம்!

Dehradun mourns its army majors killed in Pulwama attacks

by Sasitharan, Feb 19, 2019, 21:26 PM IST

பிப்ரவரி 14ம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் இந்திய சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதல் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சோகம் மறைவதற்குள் நேற்று அதிகாலை அதே புல்வாமா பகுதியில் தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே மீண்டும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.

முதலில் 40 பேர் உயிர்போக காரணமாக இருந்த பிப்ரவரி 14ம் தேதி நடந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ்-இ- முகமது அமைப்பைச் சேர்ந்தவர்களே மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு மேஜர் உள்பட நான்கு வீரர்கள் வீர மரணமடைந்தனர். இருப்பினும் ராணுவ வீரர்கள் திருப்பி தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொள்ளப்பட்டனர்.

இறந்த வீரர்களின் இறுதிச் சடங்குகள் நேற்று நடைபெற்றது. இத்தாக்குதலில் இறந்த மேஜர் வி.எஸ் தவுண்டியால் டேராடூன் பகுதியைச் சேர்ந்தவர். டேராடூனில் மேஜர் தவுண்டியாலுக்கு நடந்த இறுதிச் சடங்கு மிகவும் சோகத்தையும் பார்ப்பவர்களின் கண்கலங்க வைத்தது. காரணம் மேஜர் இறந்தது அவனது தாய்க்கு தெரியாது. 60 வயதான அவரது தாய்க்கு இதயத்தில் பிரச்னை உள்ளது.

இதனால் தாண்டியாலின் இறப்பு பற்றி கூறினால் அதிர்ச்சியில் அவரின் உடல்நிலை பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் தெரிவிக்கவில்லை. இறுதியாக மேஜரின் மனைவி நிகிதா கவுலுக்கு மட்டுமே அவரின் இறப்பு செய்தி சொல்லப்பட்டது. கடந்த ஆண்டில் தான் தவுண்டியாலுக்கும் - நிகிதாவுக்கும் திருமணம் நடைபெற்றது. தங்களது முதல் வருட திருமண நாளை கொண்டாடும் முன்பே தவுண்டியால் உயிரிழந்துவிட்டார்.

தவுண்டியால் குறித்து பேசிய அவரது நண்பர் மாயங் கந்தூரி, ‘நானும் தவுண்டியாலும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். தன் சிறு வயதில் இருந்தே ராணுவத்தில் இணைய வேண்டும் என அடிக்கடி கூறி வருவான். 2011-ம் ஆண்டுதான் ராணுவத்தில் இணைந்தான். அவனுக்கு இறப்பதற்கான வயது இது இல்லை என்றாலும் அவன் ஆசைப்படியே ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காகவே தன் உயிரை விட்டுள்ளான்.

அவரது வீட்டில் தவுண்டியால் தான் கடைசி மகன். யாரிடமும் சத்தமாகக் கூட பேசமாட்டான். கடந்த முறை தவுண்டியால் ஊருக்கு வந்திருந்தபோது நாங்கள் பேசிக்கொள்ள எங்களுக்கு அதிக நேரம் கிடைக்கவில்லை. இதனால், அடுத்த முறை வரும்போது பேசலாம் என கூறிவிட்டு சென்றான். ஆனால் இனி எங்களால் என்றுமே பேசமுடியாத நிலை ஏற்பட்டுவிட்டது’ என கூறினார். முன்னதாக மேஜரின் உடல் நேற்று மாலை அவரது சொந்த ஊரான டேராடூனுக்கு கொண்டு செல்லப்பட்டு இன்று காலை இறுதிச் சடங்கு நடைபெற்றது.

இறுதிச் சடங்கில், தன் கணவர் உடலுக்கு அருகிலே நீண்ட நேரம் நின்ற நிகிதா அவரையே பார்த்துக்கொண்டிருந்தார். மேலும் அவருக்கு முத்தமிட்டு, அருகில் சென்று அவருடன் பேசினார். பின்னர் உடலை அடக்கம் செய்யும்போது தன் கணவனுக்கு சல்யூட் அடித்து வழியனுப்பி வைத்தார். இந்த காட்சிகள் சுற்றியிருந்தவர்களின் மனதை உருக்கும் விதமாக இருந்ததுடன் அனைவரையும் கண் கலங்க வைத்தது.

You'r reading `கடைசி முத்தம் சல்யூட் - ராணுவ வீரரின் இறுதிச்சடங்கில் கண்கலங்க வைத்த மனைவியின் பாசப்போராட்டம்! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை