`சிஆர்பிஎப் வீரர்களின் வலி புரிகிறது ஆனால் எங்கள் வலி?- தீவிரவாதி ஆதிலின் தந்தை வேதனை!

Father of Pulwama bomber speaks about sons terror activity

by Sasitharan, Feb 17, 2019, 20:18 PM IST

காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீது நடந்த தற்கொலைப் படை தாக்குதல் உலகநாடுகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத ஒரு தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. 44 வீரர்களின் உயிரை காவு வாங்கியதற்கு காரணமானவர் ஆதில் அகமது தார் என்ற 22 வயது இளைஞன். இவன் புல்வாமா மாவட்டத்தில் உள்ள காக்கபோரா கிராமத்தைச் சேர்ந்தவன். காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத கும்பலிடம் சேர்ந்த ஆதில், பின்னர் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ- முகமது என்ற அமைப்பில் இணைந்து தீவிரவாத பயிற்சி பெற்று இந்த தாக்குதலை நடத்தியுள்ளான். ஒற்றை ஆளாக, ஸ்கார்பியோ கார் முழுவதும் 350 கிலோ வெடிப் பொருள்களை விளையாட்டுப் பொருள்களுக்குள் மறைத்துவைத்து அதனை வீரர்கள் வந்த வாகனத்தில் மோத வைத்து இந்த கொடூரத் தாக்குதலை அரங்கேற்றியுள்ளான்.

ஆதில் தான் தாக்குதல் நடத்தினான் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக அவன் பேசிய வீடியோக்களும் வெளியாகின. அதில், ``இதுதான் காஷ்மீர் மக்களுக்கு என் கடைசி செய்தி. இந்த வீடியோவை நீங்கள் பார்க்கும்போது சொர்க்கத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். காஷ்மீரில் உள்ள இளைஞர்கள் இந்தியாவுக்கு எதிராகப் புனிதப் போர் நடத்த வேண்டும். காஷ்மீரில் உள்ள இஸ்லாமியர்களின் நிரந்தர விடுதலைக்காகவே என் வீர மரணம்" எனப் பேசியிருந்தார்.

இதற்கிடையே, தாக்குதல் குறித்து ஆதிலின் தந்தை குலாம் ஹசனை ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்று பேட்டியெடுத்துள்ளது. அதில், ``கடந்த ஆண்டு மார்ச் 18-ம் தேதி முதல் என் மகனை காணவில்லை. அவனை தேடி கண்டுபிடிக்க பல முயற்சிகள் எடுத்தும் பலனளிக்கவில்லை. ஆனால் எப்படியாவது வீட்டுக்கு வந்துவிடுவான் என எண்ணியிருந்தேன். இனி அதற்கு வாய்ப்பில்லை. இனிமேல் அவன் வரமாட்டான் எனத் தெரிந்துவிட்டது.

ராணுவ வீரர்கள் மீதான தாக்குதலை நினைத்து நானோ எங்கள் குடும்பமோ மகிழ்ச்சியில் இல்லை. வீரர்களை இழந்து வருந்தும் அவர்களது குடும்பத்தினரின் வேதனையும், வலியும் எனக்கு புரிகிறது. ஆனால் இதே வலியைத் தான் காலங்காலமாக காஷ்மீரில் நாங்கள் அனுபவித்து வருகிறோம். என் மகனின் இழப்பு வேதனையை தருகிறது. அவனை இழந்து தவிக்கும் இந்த நேரத்தில் எதையும் கூற நான் விரும்பவில்லை. அரசுக்கு மட்டும் ஒரே ஒரு கோரிக்கையை விடுக்கிறேன். முடிந்தவரை விரைவாக இந்த தீவிரவாத பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு இளைஞர்களை மோசமான பாதையில் செல்வதில் இருந்து தடுத்து நிறுத்துங்கள்" என்றவர், ``ஒருபோதும் பணத்துக்காக என் மகன் தீவிரவாத அமைப்பில் சேர்ந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அவனுக்கு படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது" என்று கூறியுள்ளார்.

முன்னதாக தாக்குதலுக்கு பிறகு ஆதில் பேசிய வீடியோவை பார்த்து காக்கபோரா கிராம மக்கள் அவனின் தந்தை குலாம் ஹசனைச் சந்தித்துக் கைகொடுத்து வாழ்த்து தெரிவித்ததாகவும் ஆனால், அதை அவர் ஏற்கவில்லை எனவும் அந்த இணையதள நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

 

பாகிஸ்தான் பத்திரிகைகளின் கொக்கரிப்பை பாருங்க....காஷ்மீரில் இந்திய வீரர்களை கொன்ற தீவிரவாதி 'சுதந்திரப் போராட்ட தியாகியாம்'!

You'r reading `சிஆர்பிஎப் வீரர்களின் வலி புரிகிறது ஆனால் எங்கள் வலி?- தீவிரவாதி ஆதிலின் தந்தை வேதனை! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை