விமானி அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவார் என இம்ரான் கான் அறிவித்துள்ளதால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் தணிந்துள்ளது. மேலும் விமானி திரும்புவதால் அவரது குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த நிலையில், பாகிஸ்தானின் அறிவிப்புக்கு பின்னர் நம் நாட்டின் முப்படை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தராமனின் ஆலோசனைக்கு பின் இவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், ``பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததை ரேடார் மூலம் அறிந்துகொண்டோம். இதில் ஒரு விமானத்தை நமது வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். பாகிஸ்தானின் F16 விமானம் இந்தியாவுக்குள் நுழைந்ததற்கான ஆதாரம் உள்ளது.
அதேநேரம் எந்த இந்திய விமானமும் சுட்டு வீழ்த்தப்படவில்லை. இந்திய நிலைகளைக் குறி வைத்தே பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. எனினும் அந்தத் தாக்குதல் முறியடிக்கப்பட்டது. அப்போது இந்திய விமானம் ஒன்று துரதிர்ஷ்டவசமாக தகர்க்கப்பட்டது. அதில் இருந்த விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் சிறைப்பிடித்துள்ளது. முதலில் பாகிஸ்தான் படைகள் இல்லாத பகுதியில் தான் அவர் விழுந்தார். அதன்பிறகே பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அவரை சிறை பிடித்துள்ளனர். தற்போது பாகிஸ்தானின் ராவல் பிண்டி ராணுவ முகாமில் அவர் தங்கவைப்பட்டுள்ளார். அவரை விடுவிப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. அவரின் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது.
லாகூரில் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் ஒப்படைக்கப்படுவார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. லாகூரில் இருந்து விமானம் மூலம் அவர் டெல்லி அல்லது மும்பை விமான நிலையம் வந்தடைவார். பயங்கரவாதத் தாக்குதலை எதிர்கொள்ள நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். நாட்டின் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளோம். நாட்டின் அமைதியை காப்பதே எங்கள் பணி" என்றனர். அப்போது அவர்களிடம், பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பியபோது, ``தாக்குதல் நடத்தப்பட்டது உண்மை தான். அதில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆனால் பலியானவர்கள் விவரம் குறித்து கூற முடியாது. நாங்கள் என்ன செய்ய நினைத்தோமோ; அதை செய்திருக்கிறோம். அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. ஆனால் அந்த ஆதாரங்களை காண்பிக்கும் அதிகாரம் மூத்த அதிகாரிகளுக்கே உள்ளது" என்றனர்.