பாஜக எம்எல்ஏ ஒருவரை அவரது சொந்த கட்சியை சேர்ந்த எம்பி ஒருவர் செருப்பால் அடித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் தலைநகர் லக்னோவில் இருந்து 200 கிமீ தள்ளி உள்ளது சான்ட கபீர் நகர் மாவட்டம். இந்த மாவட்டத்தில் இருந்து பாஜக சார்பில் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சரத் திரிபாதி. இவர் இன்று மாவட்டத்தில் நடந்த அரசு கூட்டத்தில் கலந்துகொண்டார். இதேகூட்டத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த எம்எல்ஏ ராகேஷ் பாகேலும் கலந்துகொண்டார். கூட்டத்தில் அரசு திட்டங்கள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது. அப்போது அந்தப் பகுதியில் போடப்பட்டுள்ள சாலைக்கு அடிக்கல்நாட்ட பெயர் பலகையில் தன் பெயர் ஏன் போடவில்லை என எம்பி சரத் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த எம்எல்ஏ ராகேஷ், ``அது என் முடிவு தான், நான் தான் பெயர் போட வேண்டாம் எனக் கூறினேன்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து இது தொடர்பாக வாக்குவாதம் முற்றியது. அப்போது கடுப்பான சரத் தான் காலில் இருந்த ஷூவை கழட்டி எம்எல்ஏ ராகேஷ்வை சரமாரியாக தாக்கினார். இதில் ராகேஷ் நிலைகுலைந்தாலும் அவரும் திருப்பி தாக்க தொடங்கினார். பின்னர் அங்கிருந்த போலீஸ் தலையிட்டு இருவருக்கும் ஏற்பட்ட சண்டையை விலக்கிவிட்டனர். இருப்பினும் ராகேஷ் தனது ஆதரவாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திரண்டு சரத்தை கைது செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பத்திரிகையாளர்கள், போலீஸ், அரசு அலுவலர்கள், மக்கள் திரண்டிருந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜகவின் மக்கள் பிரதிநிதிகள் இருவர் இப்படி மோசமாக சண்டையிட்டது இப்போது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்ப்பு குரல்கள் எழவே, ``இருவருக்கும் கட்சி அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அங்கு விசாரணை நடத்திய பின் இருவருக்கும் தண்டனை உறுதி" என உத்தரபிரதேச பாஜக தலைமை அறிவித்துள்ளது.