ஒடிசாவில் லான்ஜிகர் பகுதியில் வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான அலுமினிய சுத்திகரிப்பு ஆலைக்கு எதிரான போராட்டத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்த பத்து மாதங்கள் கூட ஆகவில்லை. இந்நிலையில் ஒடிஷாவில் வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஆலைக்கு எதிரான போராட்டத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஒடிசாவின் லான்ஜிகர் பகுதியில் வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான அலுமினிய சுத்திகரிப்பு ஆலை 250 ஏக்கரில் அமைந்துள்ளது. இந்த ஆலையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என உள்ளூர் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று வேலை வாய்ப்பு கோரி 40-க்கும் மேற்பட்டோர் ஆலை வாசலில் தர்ணாவில் ஈடுபட்டனர்.
தர்ணாவில் ஈடுபட கூடாது போலீஸார் வலியுறுத்தினர். இருப்பினும் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். போலீஸார் மக்களை அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் போலீஸாருக்கும் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கூட்டத்தைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். தடியடியில் சம்பவ இடத்தில் ஒருவரும், மருத்துவமனையில் ஒருவர் என மொத்தம் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் காயமடைந்தனர். பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் லான்ஜிகரில் 144 தடைஉத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர்கள் அனைவரும் மலைவாழ் மக்கள் ஆவர்.