நாட்டில் வறுமையை ஒழிக்க ஏழைக் குடும்பங்களுக்கு, ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என்ற ராகுல் காந்தியின் அறிவிப்பு ஒரு ஏமாற்று வேலை என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதி தொடர்பான ஆலோசனை கூட்டம் டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.ஆலோசனை கூட்டம் முடிவடைந்த பின், செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘நாட்டில் உள்ள 20 சதவீதம் ஏழைக் குடும்பங்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்க முடிவு செய்துள்ளோம். அதனால், 5 கோடி ஏழைக் குடும்பத்தாருக்கும் ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் 25 கோடி மக்கள் நேரடியாகப் பயன்பெறுவார்கள். இந்த திட்டம் ஏராளமான பொருளாதார வல்லுநர்களுடன் ஆலோசித்து வடிவமைக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் இந்த அறிவிப்பு குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கருத்து தெரிவித்துள்ளார். அதில், ``விவசாயக் கடன் ரூ.72,000 கோடியைத் தள்ளுபடி செய்வதாக 2008-ல் காங்கிரஸ் அறிவித்தது. ஆனால் ரூ.52,000 கோடிதான் தள்ளுபடி செய்தனர். கடைசியில் டெல்லி வர்த்தகர் ஒருவர் இதன் முக்கால்வாசிப் பயனை அடைந்ததாக இந்திய தலைமைத் தணிக்கையாளர் அறிக்கை தெரிவித்தது. ராகுல் அறிவித்த ஏழைகளுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டம் ஒரு தவறான அறிவிப்பாகும். நடைமுறைப்படுத்த முடியாத திட்டம். 1971 ல் இந்திரா வெற்றி பெற்றபோது வறுமையை ஒழிப்போம் என்றார். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எடுத்த நடவடிக்கைகளும் வெற்றிபெறவில்லை.
ஆகையால், இத்தகைய உத்தரவாதங்களை அளிப்பதற்கு காங்கிரசுஸுக்கு உரிமை கிடையாது. காங்கிரஸ் பொய்யான வாக்குறுதி அளிப்பதே வரலாறாக உள்ளது. ராகுல் காந்தி அறிவித்ததை விட 1.5 மடங்கு அதிகமாக பிரதமர் மோடி அரசு ஏழைகளுக்கு சாதகம் செய்துள்ளது. நாங்கள் ஏற்கெனவே உர மானிய வகையில் ரூ.75,000 கோடி, ஆரோக்கியத்துக்காக ரூ.20,000 கோடி செலவிட்டுள்ளோம். இதில் 70-80% நடவடிக்கைகள் வங்கிகள் மூலம் நேரடியாகச் செய்யப்பட்டு வருகின்றன" எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.