அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுவில் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமியும் கையெழுத்திடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக முன்னாள் எம்.பி, கே.சி.பழனிச்சாமி தொடர்ந்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அதிமுக கொள்கை விதிகளின்படி பொதுச் செயலாளருக்கே முழு அதிகாரம் உள்ளது. ஆனால் அந்த விதிகளின்படி செயல்படாமல், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற புதிய பதவிகளை உருவாக்கியதற்கு எதிராகவும், அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுவில் ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் கையெழுத்திட தடை விதிக்க கோரியும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
தற்போது மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் அந்த வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற கே.சி.பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று டெல்லி உயர் நீதிமன்றம் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அப்போது, இந்த வழக்கில் இடைக்கால தடை விதிக்க எந்த அவசியமும் இல்லை எனக்கூறி கே.சி.பழனிசாமியின் வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.