சீனாவை விட மூன்று மடங்கு இந்தியாவில் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால், நம்நாட்டின் கல்வியின் தரம் பின்தங்கியுள்ளதாக சர்வேயில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவின் கல்வித் தரம் குறித்து நிதி ஆயோக் ஆய்வு செய்தது, தற்போது அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், கல்வியின் தரம் அதிகரிக்கவில்லை என்ற திடுக்கிடும் தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி சட்டத்தின் படி, 6 முதல் 14 வயது குழந்தைகளுக்குக் கல்வி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த வயதுக்கு உட்பட்ட 71 சதவீத மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள். அரசுப் பள்ளிக்கு எதிராகத் தனியார் பள்ளிகளின் விகிதம் 7:5 ஆக உள்ளது. இதில், தொடக்க நிலை மற்றும் இரண்டாம் நிலை மட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளே அதிகம்.
சீனாவில் 5 லட்சம் பள்ளிகள் இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் 15 லட்சம் பள்ளிகள் உள்ளன. இது 3 மடங்கு அதிகமாகும். இருப்பினும், கல்வியின் தரத்தில் மிகவும் மோசமாக உள்ளதாகவும், பள்ளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பற்றாக்குறை, தகுதியற்ற முறையில் இயங்கும் பள்ளிகள் தான் காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்தியபிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களின் கிராமப்பகுதிகளில் செயல்படும் பள்ளிகளில் 100 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் எனும் நிலை உள்ளது. அதேபோல், ராஜஸ்தான் , கர்நாடகா, ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் 70 ஆரம்ப பள்ளிகளில் 50-க்கும் குறைவான மாணவர்களே படிக்கின்றனர்.
இதில், வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் பாதிப் பேருக்கு 2-ம் வகுப்பு பாடபுத்தகத்தை படிக்க முடியவில்லை என்பதுதான். இதற்கு, முக்கிய காரணம் ஆசிரியர் பற்றாக்குறை எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும், ஆரம்ப நிலையில் கல்வியின் தரம் உயராமல் இருப்பது, மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கி உள்ளது.