எரிக்சன் நிறுவனத்துக்கு அனில் அம்பானி நிலுவை தொகையை கொடுக்காமல் இழுத்தடித்த வழக்கில், உச்ச நீதிமன்ற இணைய தளத்தில் தவறான தகவலை பதிவு செய்த பணியாளர்கள் 2 பேரை பணிநீக்கம் செய்து, அவர்களை கைது செய்ய தலைமை நீதிபதி உத்தரவி்ட்டார்.
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக விளங்கியவர் அனில் அம்பானி. ஆனால் இன்று அவர் நிலைமை மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. தொட்ட தொழில்களில் எல்லாம் அடி மேல் அடி அதனால் பலத்த நஷ்டம். அதனால் எரிக்சன் நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய நிலுவை கொடுக்காமல் இழுத்தடித்து வந்தது அனில் அம்பானி நிறுவனம். பொறுத்து பொறுத்து பார்த்த நிறுவனமும் ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாமல் நீதிமன்றத்தில் அனில் அம்பானி நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தது.
அனில் அம்பானி நீதிமன்றத்தில் பேசி எரிக்சன் நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய தொகையை குறைத்தார். ஆனாலும் அதன் பிறகும் அம்பானியால் அந்த தொகையை அவரால் கொடுக்கமுடியவில்லை. இதனையடுத்து எரிக்சன் நிறுவனம் அம்பானிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு கடந்த ஜனவரி விசாரணைக்கு வந்தது, அப்போது அனில் அம்பானி நீதிமன்றத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நீதிபதி ஆர்.எப். நாரிமன் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.
ஆனால், இந்த உத்தரவை உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியாளர்கள் மணவ் மற்றும் தபன் ஆகியோர் தவறாக அதாவது அனில் அம்பானி ஆஜராக தேவையில்லை என்று பதிவேற்றம் செய்தனர். இந்த விஷயத்தை நீதிபதி நாரிமன் கவனத்துக்கு கொண்டு சென்ற எரிக்சன் நிறுவனம். உடனே நாரிமன் அந்த விவகாரத்தை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் தெரிவித்தார். அதனையடுத்து தலைமை நீதிபதி தவறான தகவலை பதிவேற்றம் செய்த அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டார்.
மேலும் அவர்களை கைது செய்யவும் உத்தரவிட்டார். அதனையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
அனில் அம்பானிக்காக உச்சநீதிமன்ற உத்தரவையே திருத்திய 'கில்லாடி பதிவாளர்கள்' அதிரடியாக டிஸ்மிஸ்!