மறைந்த காங்கிரஸ் தலைவர் என்.டி.திவாரியின் மகன் ரோஹித் சேகர் திவாரியின் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக மனைவி அபூர்வா சுக்லா கைது செய்யப்பட்டுள்ளார். ரோஹித் சேகர் தன்னிடம் பணிபுரிபவரின் மனைவியுடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக போலீசில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்-மந்திரியாக இருந்தவர் என்.டி.திவாரி. இவருடைய மகன் ரோகித் சேகர் (வயது 40) டெல்லியில் வசித்து வந்தார். கடந்த 15-ந் தேதி நள்ளிரவில் ரோகித் சேகர் அவருடைய வீட்டில் மூக்கில் ரத்தம் வடிய 16-ந் தேதி மயங்கி கிடந்தார்.
உடனடியாக அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். முதலில் இயற்கையான முறையில் ரோஹித் சேகர் இறந்து விட்டதாகவே கருதினர். ஆனால் அவருடைய உடல் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட போது ரோகித் சேகர் கழுத்து நெரிக்கப்பட்டதும், அவர் மூச்சுத்திணறி இறந்ததும் தெரியவந்தது.
அவருடைய மரணம் இயற்கையானது அல்ல என்றும், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து ரோகித் சேகர் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக ரோகித் சேகரின் மனைவி அபூர்வா சுக்லா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அபூர்வாவிடம் சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று கைது செய்யப்பட்டார். ரோஹித் சேகர், தன்னுடன் பணியாற்றும் நபர் ஒருவரின் மனைவியுடன் நட்பு பாராட்டி வந்ததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக அபூர்வ சுக்லா கூறியுள்ளார். சம்பவத்தன்று ரோஹித் சேகர், அவருடைய தாய் உஜ்வாலா சர்மா, உடன் பணிபுரியும் நபர் மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் உத்தரகாண்ட் மாநிலம் சென்று திரும்பியுள்ளனர்.
அன்று இரவு டெல்லி ஓட்டல் ஒன்றில் அனைவரும் மது விருந்தில் பங்கேற்றுள்ளனர். இதை தாம் ரோஹித்துக்கு வீடியோ கால் செய்த போது அறிந்து கொண்டதாகவும், பின்னர் வீடு திரும்பிய ரோஹித்தை கழுத்தை நெரித்து கொன்று விட்டு, ஒன்றும் தெரியாதது போல் அடுத்த அறைக்குள் தூங்கச் சென்று நாடகமாடியதாகவும் அபூர்வா சுக்லா கூறியுள்ளார்.