சென்னை புளியந்தோப்பில் 50 வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
சென்னை புளியந்தோப்பு பி.கே. காலனியை சேர்ந்தவர் ஆனந்தன் (58). இவர் மீது கஞ்சா விற்பனை செய்தது, மதுவிற்பனை செய்தது மற்றும் ஆந்திராவுக்கு ரசாயனம் கடத்தியது, கொலை வழக்கு, அடிதடி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.
மேலும் இவர் தொடர்புடைய 14 வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். கடந்த 5 வருடமாக போலீசார் இவரை பிடிக்க முயற்சி செய்தும் முடியவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் தனிப்படை அமைத்து இவரை தீவிரமாக தேடிவந்தனர்.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த கள்ளிக்குப்பம் பகுதியில் ஆனந்தன் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று அங்கு சென்ற போலீசார் ஆனந்தனை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர், அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.