இணையதளத்தில் தன்னை எதிர் விமர்சனம் செய்பவர்களுக்காக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை குஷ்பு.
மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று கேரளாவில் நடைபெற்றது. இங்கு, பல பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாகப் புகார்கள் எழுந்த நிலையில், கண்ணூர் தொகுதிக்குட்பட்ட மையில் கண்டக்காய் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மக்கள் விறுவிறுப்பாக வாக்களித்துக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு வாக்காளர் ஓட்டுபோட்டு கொண்டிருக்கும்போது, வாக்கு எந்திரத்திற்கு அருகே வைக்கப்பட்டிருந்த ஒப்புகைச்சீட்டு (விவிபேட்) காட்டும் எந்திரத்திற்குள் இருந்து ஒரு பாம்பு வெளியே வந்தது. இதனை, சற்றும் எதிர்பாராத அந்த நபர் கூச்சலிட்டார். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இதனையடுத்து, விவிபேட் இயந்திரத்துக்குள் பாம்பு இருந்தது சர்ச்சையைக் கிளப்பியது. இது குறித்து திருவனந்தபுரம் காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான சசி தரூர், ‘விவிபேட் இயந்திரத்துக்குள் பாம்பு புகுந்திருப்பது இந்திய வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை’ என்று குறிப்பிட்டு ட்விட்டரில் இது பற்றின செய்தியைப் பகிர்ந்திருந்தார்.
அவரைத் தொடர்ந்து, நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு, ‘மோடி தலைமையிலான ஆட்சியில் எது வேண்டுமானாலும் நடக்கும்’ என்று ட்வீட் செய்து செய்து மோடியைக் கிண்டல் செய்திருந்தார். இதற்கு, பாம்பு புகுந்ததற்கு எல்லாம் மோடி பொறுப்பாக முடியுமா என குஷ்புவின் கருத்துக்கு எதிராக ட்வீட் செய்தனர் நெட்டிசன்கள். ஒரு பக்கம் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது.
ஆனால், குஷ்பு தன்னை எதிர் விமர்சனம் செய்பவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தன்னுடைய பிரத்தியேக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, especially for the trolls.. எனப் பதிவிட்டுள்ளார்.