செய்தியாளர் ஒருவரின் கேள்வியால் கடும் கோபமுற்றார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.
மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. கேரளா, கர்நாடகம் என மொத்தம் 116 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்படி, கண்ணூர் தொகுதியில், தனது வாக்கினைப் பதிவு செய்த கேரள முதல்வர் பினராயி விஜயன், எர்ணாகுளம் கொச்சியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நேற்று இரவு தங்கியிருந்தார்.
இந்நிலையில், எர்ணாகுளம் அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து விமான நிலையத்திற்கு இன்று காலை புறப்பட்டு சென்றார். அப்போது, செய்தியாளர்கள் அவரை சந்தித்தனர். அதில், செய்தியாளர் ஒருவர், ‘கேரளாவில் 30 ஆண்டுகளுக்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 77. 68 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. இதை பற்றிய தங்களது கருத்து என்ன? என்று கேட்டார்.
அதற்கு ‘அந்தப்பக்கம் தள்ளி நில்லுங்கள்’ என கோபமாக சொல்லிவிட்டு, நிருபரின் கேள்விக்குப் பதிலளிக்காமல் சென்று விட்டார். முதல்வரின் இந்த செய்யல் தற்போது கேரள அரசியலில் சர்ச்சையாகப் பேசப்பட்டு வருகிறது.
முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கடுகடுப்பாக நடந்துகொள்வது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு திருவனந்தபுரத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, ஆர்.எஸ்.எஸ் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு ‘வெளியே செல்லுங்கள்’ எனக் கோபம் அடைந்தார். இவ்வாறு, செய்தியாளர்களிடம் தனது கோபத்தை வெளிப்படுத்தி வரும் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக அம்மாநில எதிர்க்கட்சியினர் கடுமையாக அவரை விமர்சித்து வருகின்றனர்.