வங்கக்கடலில் உருவான ஃபோனி புயல் தீவிரமடைந்துள்ளது. புயலை எதிர்கொள்ள ஒடிசா மாநிலம் தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதோடு, தேர்தல் நடத்தை விதிகளும் தளர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒடிசாவில் ஃபோனி புயல் கரையக் கடக்கும்போது மணிக்கு 175 கிலோமீட்டர் முதல் 185 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசும் எனவும் ஃபோனி புயலின் வேகம் மணிக்கு 205 கிலோமீட்டர் வரை அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து, ஒடிசா மாநிலம் பூரி, கேந்தரபாரா பாலசூர் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபோனி புயல் அடுத்த 12 மணி நேரத்தில் வடமேற்கு நோக்கி செல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதோடு, இரவில் வடக்கு – வடமேற்குத் திசை நோக்கித் திரும்பி ஒடிசாவில் கரையை நெருங்கும் புயல் கோபால்பூர் – சன்பாலி இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான ஃபோனி புயல் சென்னைக்கு வடகிழக்கே 420 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இந்நிலையில், வரும் 3ம் தேதி ஒடிசா மாநிலம் பூரி அருகே கரையக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக தமிழக கடலோர பகுதிகளில் 30-40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். மேலும், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு நாளை மறுநாள் வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.