17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் வரும் ஜூன் 6-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
வரும் 30-ந் தேதி மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். அவருடன் புதிய அமைச்சர்களும் அன்றைய தினமே பதவியேற்கின்றனர். அதனைத் தொடர்ந்து 31-ந் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூடி மக்களவை கூட்டத் தொடரை கூட்டுவது தொடர்பாக முடிவு எடுக்கப்பட இருக்கிறது.
ஜூன் 6-ந் தேதி 17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்கலாம் என கூறப்படுகிறது. கூட்டத்தின் முதல் நாளில் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டு, புதிய எம்பிக்களுக்கு அவர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
அதன் பின் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுவார். மக்களவை சபாநாயகர் தேர்தல் ஜூன் 10-ந் தேதி நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கூட்டத் தொடர் ஜூன்15-ந் தேதி வரை நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.